மறக்க முடியாத செப்டம்பர் 22……

0
14
செப்டம்பர்  22, 2016… அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியலில் மூழ்கிப் போனவர்களும் மறக்க முடியாத நாள். ஆம் கடந்த ஆண்டு இதே நாள்தான்  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சரியாக இன்றோடு ஓராண்டாகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு மர்ம முடிச்சுகள் போட்ட தொடக்க நாளும் அன்றுதான்.
அந்நாளில் இரவு 10 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக உள்ளார் என்ற தகவல் தொலைபேசி மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டது போது மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் இருந்தார். அதோடு நீர்சத்து குறைவு, நீரழிவு உள்ளிட்ட பிரச்சனைகளால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு பிரச்சனை போன்ற பல குறைபாடுகளாலும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
அதனை அடுத்து செப்டம்பர் 23,  நள்ளிரவு 1 மணிக்கு, ஊடகங்களிடம் இந்தச் செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது. நிருபர்களின் செல்போன்கள் அலறிய அலறலில், அக்டோபர் 22ஆம் தேதி இரவு அமைதி இழந்தது. ஊடகங்கள் மூலம் செய்தி அறிந்த தமிழகம் படபடத்துப் பரபரத்தது. முதல்வர் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் தவித்தனர்; அமைச்சர்கள் அப்போலோவில் குவிந்தனர்; மருத்துவமனை ஸ்தம்பித்தது, காவல் அதிகாரிகள் அப்போலோவைக் காவல் காத்தனர்; ஜெயலலிதா விரைவில் குணமடைய அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள் கூறினர்.
ஜெயலலிதா நலம்பெற பிரார்த்தனை செய்யும் பெண்கள்…
முதலில் இச்செய்தியை அத்தனை பெரிதாய் எடுத்துக்கொள்ளாத தி.மு.க தலைவர் கருணாநிதி, பின்னர் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “முதல் அமைச்சர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏராளாமான வதந்திகள் தீயாய்ப் பரவின. கிட்னி பாதிப்பு, நுரையீரலில் பிரச்னை, இதயக் கோளாறு என்று தொடங்கியவர்கள், மூளைச்சாவில் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
சிகிச்சைக்காக சிங்கப்பூர் போகிறார் ஜெயலலிதா என்றனர். பதறிப்போன அரசாங்கம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை வைத்தே, முதல் எச்சரிக்கை மணியை அடித்தது.  பிறகு….செப்டம்பர் 25ஆம் தேதி, அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்லத் தேவை இல்லை. தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப் 22 இரவு…..
இப்படியே ஒரு மாதம்.. தேர்தல் அறிவிப்பு, வேட்பாளர் பட்டியல், ”நான் உங்களின் அம்மா பேசுகிறேன். நான் நலமாக இருக்கிறேன்..’வாட்ஸ்-அப்பில் ஒரு குரல் பேசியது, மன்னார்குடி டாக்டர்கள்,  அரச குடும்பங்களின் டாக்டர், மேதகு ஆளுநர் வருகை, உள்ளாட்சித் தேர்தல் ரத்து, எய்ம்ஸ் டாக்டர்கள், கைவிட்ட மோடி, ராகுல் காந்தி வருகை, ஓரணியில் எதிர்கட்சிகள், சசிகலாவின் திட்டங்கள், இப்படியே சென்ற அந்த மூன்று மாதங்கள் இறுதியில் மர்மங்களுடன் டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடிந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் என்ற செய்தி உலகத் தமிழர்களை உலுக்கியது.
 இதனிடையே….
கடந்த ஆண்டு இதே நாளில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, அவர் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் :
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நீர்சத்து குறைவு, நீரழிவு உள்ளிட்ட பிரச்சனைகளால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு பிரச்சனை போன்ற பல குறைபாடுகளாலும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை விவரம் அறிந்து கதறி அழும் பெண்கள்!
அது போல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமுன், அவருக்கு வழங்கப்பட்ட சில தவறான மருந்துகள்தான் அவர் உடல்நிலை மேலும் சிக்கலாகக் காரணமாக அமைந்தது என்று சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகக் கூறும் இந்த அறிக்கை, நீரிழிவு மற்றும் ரத்த உயர் அழுத்தம் போன்ற ஏற்கனவே இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு , வாய்வழியாக மருந்துகளை உட்கொண்டு வந்தார், தோல் வியாதி ஒன்றுக்காக ஸ்டீராய்ட் மருந்து ஒன்றும் அவருக்கு தரப்பட்டுவந்தது என்று கூறியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது.  அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள், மூத்த இதய நோய் மருத்துவர்கள், சுவாசப் பிரிவு மருத்துவர்கள், தொற்று நோய் துறையின் ஆலோசகர்கள் நீரிழிவு நோய் பிரிவு நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் பிசியோதெரபி நிபுணர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். மேலும், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு பிசியோதெரபி பிரிவு குழுவினரும் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 5 மருத்துவர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியப்போது…
தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள், 5 முறை சென்னை வந்து ஜெயலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினார். பின்னர், மருத்துவமனையில் குடும்பத்தினருடனும், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
தொடர் சிகிச்சை காரணமாக அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ளத் துவங்கினார். அதன் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாகவும், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சில அவதூறுகள் எழும்பியுள்ளன. இது முற்றிலும் தவறாகும். டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு பெரும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனைடியாக அவர்க்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென இதய செயல் இழப்பு ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதய,நரம்பியல் செயல்பாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது .இதய செயலிழப்பிற்கு பிறகு ஜெயலலிதா உடல்நிலையை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதாவின் இதயம் செயல்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் ஓ. பன்னீர் செல்வம் , அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலா உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற மருத்துவக் குழுவினரைக் கேட்டுக்கொண்டனர். டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார்.
ஆனால் இதையெல்லாம் நம்புவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கடைக்கோடி தமிழன் ஒருவனும் தயாரக இல்லை