தேசிய முன்னணிக்கு ஈடாகியதா பிபிபிஎம் கட்சி?

0
7

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பிபிபிஎம்) கட்சி தோற்றுவிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. இந்த ஓராண்டில் அக்கட்சி முதிர்ச்சியடைந்ததா, வலுவாக 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தக்கதா, முழுமை பெற்றுள்ளதா, கிட் சியாங் கூறுவது போன்று மலாய் சுனாமியை கொண்டு வருமா அல்லது நீர் குமிழி போன்று ஊதி இறுதியில் சுயமாக வெடித்து ஒன்றுமில்லாமல் போய்விடுமா என்ற கேள்விகள் பலமாக கேட்கப்படுகின்றன.

பொதுத் தேர்தல் நடந்து, வாக்குகள் செலுத்தப்பட்டு, அவை எண்ணப்பட்டு முடிவு தெரியும் வரை அது பல்வேறு குறைகளைச் சொல்லலாம். பல்வேறு குறைகூறல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். கடந்த வாரம் பிபிபிஎம் கட்சி மூவாரில் தனது முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சொந்த ஊரானதும் அவரின் அரசியல் வாழ்வு தொடங்கியதும் இந்த மூவாரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 முகைதீன் மூவாரில் பிறந்து வளர்ந்தவர். அவரின் தகப்பனார் சமய ஆசிரியராக இருந்து நற்பெயரை எடுத்தவர். முகைதீனுக்கு சொந்தங்களும் உறவுகளும் தெரிந்தவர்களும் இங்கு நிறையவே உள்ளனர். முகைதீன் அரசியலில் நுழைந்து பாகோ தொகுதியில் வெற்றி பெற்று, மாநில மந்திரி புசாராகி, பின்னர் மத்திய அரசில் அமைச்சராகி இறுதியில் துணைப் பிரதமராக ஆகியிருந்தாலும், தம்முடைய ஊரான மூவாரை மறக்காமல் அதற்குத் தேவையான வசதிகளையும் மேம்பாட்டையும் கொண்டு வர பின் வாங்கியதில்லை. பாகோவை விட மூவாரில் அதிகமான சீனர்கள் இருப்பதால், முகைதீன் அடுத்தப் பொதுத் தேர்தலில் அங்குதான் போட்டியிடவிருப்பதாக ஆரூடங்கள் கூறப்படுவதால், பிபிபிஎம் கட்சிக்கு மூவார் எவ்வளவு முக்கியத்துவமானது என்பது தெளிவு.

அக்கட்சியின் முதலாமாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென துன் மகாதீரும் அவரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரும் அறிக்கை விட்டிருந்தனர். நகரின் மத்தியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சமையல் போட்டிகள், உடல்நலச் சோதனை, சித்திரம் வரையும் போட்டி, கலை நிகழ்ச்சிகள், மினி பந்து விளையாட்டுப் போட்டிகள், மோட்டார் சைக்கிள்களை அழகு படுத்துதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு முதியவர்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிகள் காலை தொடங்கி மாலை வரை நடத்தப்பட்டாலும், 200லிருந்து 300 பார்வையாளர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களும் பணியாளர்களும் அடங்குவர்.

அந்த நிகழ்ச்சிகள் யாவும் அம்னோ இதுகாறும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை ஒத்திருந்ததாகப் பலரும் குறிப்பிட்டிருந்தனர். என்ன வேறுபாடு என்றால், இம்முறை அவற்றை நடத்தியது பிபிபிஎம் கட்சியாகும், பெயரில் மட்டும்தான் வேறுபாடு. அம்னோ இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவதில் வலுவும் ஆள்பலமும் கொண்டிருப்பதால், பிபிபிஎம் அதன் முன் நிற்க முடியவில்லை. பிற்பகல் 3 மணியளவில் முகைதீனும் முக்ரிஸும் அங்கு வந்தனர். அறிவிப்பாளர் கூட்டத்தின் கவனத்தைத் திருப்ப எவ்வளவோ முயன்றாலும், அது நடைபெறாமல் போனது. கூட்டத்தினரிடையே முகைதீன் நடந்து சென்றாலும், ஒரு சிலரே அவருடன் அளவளாவி கைகுலுக்கிக் கொண்டனர். அவர் துணைப் பிரதமராக இருந்ததற்கும் தற்போது புதிய கட்சியை தோற்றுவித்ததற்கும் பெரிய வித்தியாசம் தெரிந்தது. முகைதீன் இதனை எதிர்பார்த்திருக்காமல் சில சமயம் அதிருப்தியோடு இருந்தது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தது இதுவே முதன்முறை என்பது புரிகிறது.

எனினும், துன் மகாதீர் அங்கு வந்த பின்னர் நிலைமை மாறியது. கூட்டத்தினரிடையே சிறிது சல சலப்பு ஏற்பட்டது. பலரும் அவரிடம் கைகுலுக்கிக் கொள்ள முனைந்தனர். ஆயினும், இது கூட நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. அங்கு வந்திருந்தோர், தங்களின் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், அங்கிருந்த அரசியல்வாதிகளைப் பொருட்படுத்தாமல் சென்றனர். இது இரவு வரை நீடித்தது.  இரவில் அங்குள்ள மண்டபத்தில், பாதிக் கூட்டமே இருந்த நிலையில் முகைதீனும் மகாதீரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். அதில் ஏதும் புதுமை இருக்கவில்லை. அரைத்த மாவையே அரைத்த வண்ணமாகவே இருந்தது. பிரதமரையும் ஆளும் கட்சியையும் தாக்குவதை விட தங்களின் கட்சி எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது, நோக்கம், என்ன செய்யப் போகிறது என்பனவற்றை விளக்கியிருக்கலாம்.

மக்களுக்கு அது எதற்காக அம்னோவை எதிர்க்கிறது என்பது புரியவில்லை. பிரதமரை கவிழ்க்கவே அது உதயமானது என்றே அவர்கள் நினைக்கின்றனர். அவர்களுக்குப் பிரதமரை அகற்றுவது பெரிய பிரச்னையாக இல்லையென்றாலும். அம்னோவை அகற்றுவது என்றென்றும் ஏற்றுக் கொள்ளமுடியாதது ஆகும். அது அவர்களின் ஊனிலும் உயிரிலும் கலந்தது என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. அதனை மாற்றுவது என்பது நடவாத காரியமாகும். பிபிபிஎம் அம்னோவை அகற்ற வேண்டுமென முயன்றாலும் அது அம்னோவின் நிழலிலிருந்து ஒதுங்க முடியாது. வெறுமையான கொள்கை மற்றும் அதிகாரப் போட்டி என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளைக் கொண்டுவரும் என்றாலும், பெரும்பான்மையான மலாய் வாக்காளர்களின் ஆதரவையும் வாக்குகளைக் கவருவதில் தோல்வியையே சந்திக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அது பொதுத் தேர்தலில் எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பதையும் மலாய் சுனாமியைக் கொண்டுவருமா என்பதையும் தேர்தல் நடந்த பின்னர்தான் தெரியவரும். எனினும் அம்னோவையும் தேசிய முன்னணியையும் அது அசைக்க முடியாது என்றே கருதப்படுகிறது.