புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆதரவற்றோர் இல்லங்கள் இணைந்து நடத்தும் ‘‘வானவில்லின் வண்ணத்து பூச்சிகள்”
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆதரவற்றோர் இல்லங்கள் இணைந்து நடத்தும் ‘‘வானவில்லின் வண்ணத்து பூச்சிகள்”

கோலாலம்பூர், செப், 22-
இந்நாட்டிலுள்ள பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சீன சமூகத்தைச் சேர்ந்த பெருநிறுவனங்கள் நிதியுதவி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி வருகின்றன. ஆனால், அரசாங்கம் பொருள் மற்றும் சேவை வரியை கொண்டு வந்த பிறகு அந்நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் 100 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக குறைந்து விட்டதாக ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை நடத்திவரும் எம்.முனீஸ்வரன் வேதனையுடன் தெரிவித்தார்.

எம்.முனீஸ்வரன்

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கி வந்த நிதியுதவியை குறைக்கும் சூழ்நிலைக்கு ஆளானதால் வேறு வழிகளின்றி எங்களின் சொந்த முயற்சியில் நிதியுதவியை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாக அவர் கூறினார். நாட்டில் குறிப்பிட்ட தரப்பினர்களுக்காக எத்தனையோ இயக்கங்கள் உள்ளன. ஆனால், ஆதரவற்றோர் இல்லங்களை ஒன்றிணைக்கும் இயக்கங்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் எங்களால் அரசாங்கத்திடம் உதவிகளையும் பெற முடியவில்லை. எங்களுக்கென்று ஒரு சங்கத்தை அமைத்தால் மட்டுமே அரசாங்கத்திடமிருந்து நிதியுதவியை பெற முடியும்.

இந்நிலையில், ஆதரவற்றோர், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், முதியவர்கள் என பல்வேறு இல்லங்களை சேர்ந்த சுமார் 10 இல்லங்கள் ஒன்றிணைந்து ‘‘வானவில்லின் வண்ணத்துப் பூச்சிகள்” என்ற பெயரில் வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி ஷா ஆலமிலுள்ள மெலாவத்தி அரங்கில் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறோம். இந்த கலைநிகழ்ச்சிக்காக 1 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறோம். பத்து இல்லங்கள் இணைந்து நடத்தும் இக்கலை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க எங்களது இல்லங்களை சேர்ந்தவர்கள் நடனம், நடிப்பு உள்ளிட்ட படைப்புகளை வழங்குவார்கள்.

ஒவ்வொரு இல்லங்களும் தினசரி உணவிற்காகவும் வாடகை, மின்சாரம், தண்ணீர் முதலானவற்றின் கட்டணங்களை செலுத்தவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன. அதனால், இந்நிகழ்ச்சியின் வாயிலாக கிடைக்கும் நிதியை சமமாக பகிர்ந்து 10 இல்லங்களுக்கும் வழங்கப்படும் என அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த கலை நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு தலைவருமான முனிஸ்வரன் கூறினார். இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் ஆதரவற்றோர் இல்லங்கள் அனைத்தும் சிறிய அளவில் இயங்கி வருவதால் பெரும்பாலான பெருநிறுவனங்கள் எங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்கள் பெரிய அளவிலான இல்லங்களை மட்டுமே தேடி செல்கின்றனர். இதனால், நாங்கள் எங்களின் சொந்த முயற்சியில் நிதியுதவியை தேடி இல்லங்களை நடத்தி வருகிறோம்.

நம் நாட்டில் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் திரையுலகத்தினர்கள் எவ்வளவு அதிகமான தொகையில் டிக்கெட்டுகளை விற்றாலும் இங்குள்ள மக்கள் டிக்கெட்டுகளை வாங்கி ஆதரவு வழங்குகின்றனர். மாற்றுத்திறனாளிகள் படும் துன்பங்கள் எண்ணிலடங்காது. அவ்வகையில், அவர்களை வைத்து பராமரிக்கும் இல்லங்கள் எத்தகைய சிரமங்களை எதிர்நோக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாதமும் இல்ல பராமரிப்புக்கு குறைந்தது ரிம 8,000 வெள்ளி தேவைபடுகின்றது. அவ்வகையில், எங்களின் நிகழ்ச்சிக்கு டிக்கெட் விலை வெறும் 10 வெள்ளி என நிர்ணயித்திருக்கிறோம். அதேவேளையில், வி.ஐ.பி. அந்தஸ்து கொண்ட பிரமுகர்களுக்கு ரிம 1,000 வெள்ளி டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

பொதுமக்கள் வழங்கும் இந்த சிறு தொகை இந்த மாற்றுதிறனாளிகளின் அடுத்த ஒரு வருட இல்ல பராமரிப்பு, அதிலுள்ள குடியிருப்பாளர்களின் தேவைக்கு பயன்படுத்தப்படும் என முனீஸ்வரன் கூறினார்.
ஆதரவற்றோர் இல்லங்கள் இணைந்து நடத்தும் இந்த கலை நிகழ்ச்சிக்கு செந்தூல் ரோட்டரி கிளப் தலைவர் குணராஜ், மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன், ரவாங் பைக்கர்ஸ் கிளப் தலைவர் டான்ஸ்ரீ பாலா முதலானோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த கலை நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு எம்.முனீஸ்வரன் (010-2457693), ஜி.பிரான்சிஸ் சிவா (019-3385959) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன