சிங்கப்பூர் | 15/2/2022 :-
சமூக ஊடகங்களில் தங்கும் அறை வாடகைக்குக் கிடைக்கும் என விளம்பரம் செய்து சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது வேலை செய்ய வரும் மலேசிய இந்தியர்களைக் குறி வைத்து மோசடி செய்யப்பட்டு வந்ததாக அந்நாட்டுக் காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் ஒரே எமாற்றுப் பேர்வழியிடம் சிக்கி ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் டாலர்களை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
மிக முதன்மையாக முகநூலில் அறை வாடகைக்குக் கிடைக்கும் என இந்த சிங்கப்பூர் ஏமாற்றுப் பேர்வழி விளம்பரம் செய்து வந்துள்ளார். அதே சமயம், சிங்கப்பூரில் வேலை தேடி வரும் மலேசிய இந்தியர்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்து நம்பி அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் – மலேசியா என வரும்போது, தனிமைப்படுத்தலை மலேசிய இந்தியர்கள் கடந்து வர வேண்டும் என்பது சட்டம். அந்தக் காலக்கட்டத்தில் ஓர் அறையின் புகைப்படத்தை அனுப்பி, முதலில் டெப்பாசிட் – முன்பணம் கொடுத்து அந்த அறையை முன்பதிவு செய்யச் சொல்கிறார் அந்த எமாற்றுப் பேர்வழி.
சிங்கப்பூரின் சட்டமும் விதிமுறையும் மிகவும் கடுமையானதாக இருக்கும் எனும் எண்ணத்தில் அவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு முன்பணமும் ஒரு மாதம் வாடகையையும் முன்பதிவுக்காக வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளனர் அவரிடம் சிக்கிய மலேசிய இந்தியர்கள்.
ஒவ்வொருவரிடமும் வாடகையாக 850 சிங்ஃப்கப்பூர் டாலரையும் முன்பணமாக 850 டாலரையும் ஏமாற்றிப் பெற்றுள்ளார் அந்த எமாற்றுப் பேர்வழி.

பின்னர், எப்போது அறைக்கு வர வேண்டும் எனும் பேச்சு எழுகின்ற நேரத்தில் ஒரு தேதி முடிவு செய்யப்படும். தனிமைப்படுத்தல் போன்ற அரசாங்க விதிமுறைகள் நிறைவடையும் காலத்தில் அந்த ஏமாற்றுப் பேர்வழி தலைமறைவாகி விடுகிறார்.
இதே முறையில் பத்துக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.
இதனால் கோபமடைந்த மலேசிய இந்தியர்கள், சிங்கப்பூர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர் என பெயர் வெளியிட விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் அநேகனிடம் தெரிவித்தனர்.

வேலைக்காக சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசிய இந்தியர்கள் இது போன்றூ ஏமாற்றப்படுவது தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதற்கு மலேசியாவில் இர்ந்து செல்லும் சீனர்களும் இந்தியர்களும்கூட விதிவிலக்கல்ல என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
வங்கியில் செலுத்தப்பட்டப் பணம் குறித்த ஆதாரங்கள், சமூக ஊடகங்களில் அந்த ஏமாற்றுப் பேர்வழியுடன் நடத்திய உரையாடல்கள், அவரின் தலைமறைவுக்குப் பிறகு செய்யப்பட்டக் காவல் துறை புகார் என அனைத்தும் அநேகன் பார்வைக்குக் கிடைத்துள்ளது.
குற்றவாளி பிடிபட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாதங்களாக மிகவும் அதிகமான சிரமப்பட்டு சேமித்தப் பணம், அதை நம்பி இருந்த வாழ்க்கை ஆகியவற்றுக்கு என்ன பதில் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் துன்பத்தை முன் வைக்கின்றனர்.

சிங்கப்பூர் பணம் 1700 டாலர் என்றால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ரிம 5286.00க்கும் மேல் ஆகும். இதைச் சேமிக்க தாங்கள் பட்டத் துன்பத்தை அநேகனிடம் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
பறிபோன பணம் திரும்பக் கிடைக்குமா ? இதற்குப் பிறகு சிங்கப்பூரில் எப்படி காலத்தை நகர்த்துவது ? சிங்கப்பூரில் வேலைக்கு வருவதற்காக வாங்கியக் கடன், அடகு வைத்த நகை என இவை அனைத்திற்கும் எப்படி ஈடு செய்வது ? என பல குழப்பத்திலும் மன அழுத்தத்திலும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

