“என் உயரம் எனக்குத் தெரியும்” என்று
தந்தையைப் போல தனயன் சொல்லமாட்டார்
.

ஆக்கம் : நக்கீரன் (மலேசியா)

கோலாலம்பூர் | 1/3/2022 :-

உலகின் தொல்குடியாம் தமிழ்க் குலத்தின் தலைநிலமான தமிழகத்தை செம்மாந்த முறையில் ஆளும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று மார்ச் முதல் நாள் 70 வயதை எட்டுகிறார்.

இந்த மலைத்திருநாட்டிலும் மேலை நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சார்பில் முதற்கண் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து.

மொகலாய சாம்ராஜியம் ஆனாலும் தொடர்ந்த ஆங்கிலேயர்தம் ஆட்சியானாலும் 1947 விடுதலைக்குப் பிந்தைய சுதந்திர இந்தியா ஆனாலும் புது டில்லி கோட்டை என்பது, வஞ்சகத்திற்கும் சூழ்ச்சிக்கும் பெயர் பெற்றது.

சுதந்திர இந்தியாவில் ஒற்றைக் கட்சி ஆட்சி தனிப்பெரும்பான்மையுடன் எப்பொழுதெல்லாம் அமைகிறதோ அப்பொழுதெல்லாம், மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதும் அதிகார வேட்கை கொண்டு அலைவதும் வாடிக்கை.

இதில், காங்கிரஸ் கட்சி ஆனாலும் ஆரிய அதிகாரத்திற்கு அடிகோலும் பாரதிய ஜனதாக் கட்சி ஆனாலும் நிறத்தில்தான் மாற்றமேத் தவிர, குணத்தில் ஒன்றுதான்.

தமிழ் நாட்டுக்கு சொந்தமான கச்சத் தீவை, காரணமேயின்றி இலங்கைக்கு தாரை வார்த்த இந்திரா காந்தி, தமிழக மக்களையோ, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையோ சிறிதும் மதிக்கவில்லை.

அதைப்போல, காவிரி நீர் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கைத் திரும்ப பெறுங்கள்; பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை நம்ப வைத்து கழுத்தறுத்தவர் பிரதமர் இந்திரா காந்தி.

இன்று காவிரிச் சிக்கல் இந்த அளவுக்கு நீடிப்பதற்கும் தமிழகம் வறண்ட பூமியாக மாறிவருவதற்கும் முழு முதல் காரணம், இந்திரா காந்திதான்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், மைசூர் மாகாணத்தில்(இன்றைய கர்நாடக மாநிலம்) கட்டப்பட்ட கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கும் சென்னை மாகாணத்தில்(இன்றைய தமிழகம்) கட்டப்பட்ட மேட்டூர் அணைக்கும் 1924-இல் நதி நீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நைல் நதி, நாடு விட்டு நாடல்ல; கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தாலும் அதன் குறுக்கே எந்த நாடும் அணைக் கட்டுவதோ நீரைத் தேக்குவதோ இல்லை; மேட்டில் உள்ளவர்கள் தண்ணீரைத் தேக்கி, தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு இன்னல் தரக் கூடாது என்பது பன்னாட்டு விதி.

இதன் அடிப்படையில்தான் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கும், மேட்டூர் அணைக்கும் இடையே ஒப்பந்தம் வரையப்பட்டு, இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அப்போதுள்ள மக்கள் தொகை, பாசன பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரு மாநிலங்களும் நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கச்சிதமாக ஒப்பந்தத்தை வரைந்திருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தைத்தான் சுதந்திர இந்தியாவின் கர்நாடக மாநிலம் புதுப்பிக்க மறுதலித்து வந்தது. அப்போது, கர்நாடக மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் தேவராஜ் அர்ஸ்.

தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதியோ, பொறுத்து பொறுத்துப் பார்த்து, கடைசியில் மாநில மக்களின் நலம் கருதி புதுடில்லி உச்சமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தியா முழுவதும் மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி, தன் அதிகார கரங்களை விரித்திருந்த நேரமது; இதில் விலக்காக, கேரளம், மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)க் கட்சி வலுவடைந்திருந்தது.

ஏறக்குறைய இந்தியா முழுவதும் தன்னுடைய அதிகாரக் கொடி படபடக்கும் வேளையில் தென் கோடி முனையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஒரு மாநிலக் கட்சி, காங்கிரஸ் கட்சியை அதிகாரக் கட்டிலில் இருந்து அகற்றுவதா? அதற்கு அம்மாநில மக்கள் துணைபோவதா என்று வெகுண்ட இந்திரா காந்தி, அகந்தை கொண்டு தமிழக மக்களை வஞ்சம் தீர்க்க முற்பட்டார்.

அதன் வெளிப்பாடாகத்தான், தமிழக மண்ணுக்கு பாத்தியப்பட்ட கச்சத் தீவை, சிரிமாவோ பண்டார நாயகேவிடம் ஒப்படைத்த சூட்டோடு, காவிரி நதி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்.

அதேவேளை, தேவ ராஜ் அர்ஸைத் தூண்டிவிட்டு, காவிரி நதிக்கு நீரைக் கொண்டுவரும் துணை நதிகளான கபினி, ஹேமாவதி, சொர்ணமுகி, சாரங்கி உள்ளிட்ட ஐந்து நதிகளிலும் அணைகளைக் கட்டி, தமிழகத்திற்கு தண்ணீரேக் கிடைக்காமல் செய்தக் கட்சி காங்கிரஸ் கட்சி.

அதைப் போல, இப்பொழுது மிருக பலத்துடன் ஆட்சி நடத்தும் மோடி தலைமையிலான பார்ப்பனர் நலம் நாடு அரசு, தமிழக மண்ணுக்கும் மக்களுக்கும் முடிந்தவரை கேடு விளைவிக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்ததும் காவிரி நீர் சிக்கல் தொடர்பான நடுவர் மன்றம் குறித்த வழக்கு புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்படவில்லை என்று பிரமான வாக்குமூலம் சமர்ப்பித்து, காவிரி நடுவர் மன்றத்திற்கு சமாதி கட்டினார் மோடி.

பிள்ளை பிடிப்பவன் குழந்தைகளை மயக்க பொம்மையைக் காட்டுவதைப் போலவும் மயக்க மருந்து கலந்த இனிப்புப் பண்டங்களைக் காட்டி கவருவதைப் போலவும் மோடி தமிழ் நாட்டுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு திருக்குறளைச் சொல்வது; ஐநா மன்றத்திற்குச் சென்றால் கணியன் பூங்குன்றனாரின் வரிகளான ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்பது என தமிழர்களை பச்சையாக ஏமாற்றி வருகிறார்.

செத்த மொழி அல்லது வழக்கு ஒழிந்த மொழி என்ற நிலையில் உள்ள சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு கோடிக் கோடியாக கொட்டித் தீர்க்கும் மோடி, இந்தியாவில் வாழும் செம்மொழியான தமிழ் வளர்ச்சிக்கு கிள்ளிக்கொடுக்கக்கூட யோசிக்கிறார்.

மண்ணுக்கு அடியில் உள்ள இயற்கை எரிவாயுவையும் பெட்ரோலிய கச்சா எண்ணையையும் எடுக்க வட இந்தியாவில் இரண்டு, மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவற்றை யெல்லாம் விட்டுவிட்டு, நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சை மண்டலத்தின் வேளாண் விளைபூமியைக் கெடுத்து தமிழ் நாட்டை வரண்ட நிலமாக மாற்றவும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கொள்ளை இடவும் மோடி துடியாய்த் துடிக்கிறார்.

அதைப் போல கடல்சார் தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவும் கூச்சமில்லாமல் செயல்படுகிறது பார்ப்பனர்களின் நலம் நாடும் பாஜக அரசு.

குஜராத் மீனவர்களை பாக்கிஸ்தான் கடற்படையினர் தாக்கினால், இந்திய மீனவர்களுக்கு பாக்கிஸ்தான் மருட்டல் என்று கொக்கரிக்கும் மோடி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கினால், அவர்களை இந்திய மீனவர்கள் என்பதில்லை; தமிழக மீனவர்கள் என்று வஞ்சிக்கிறது மோடியின் புதுடில்லி அரசு.

கன்னியாகுமரி, இராமேஸ்வர மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக நாள் தவறாமல் இலங்கை கடற்படை தாக்கும் வேலையில், இந்திய கடலோர காவல் படை என்ன செய்கிறது?

தமிழக மாணவர்களில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவர் ஆகாமல் தடுக்க ‘NEET’ என்னும் தேர்வு முறையை நடைமுறைப்படுத்தி, தமிழக மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கிறது மோடி அரசு;

தமிழ் நாட்டில் உள்ள மத்திய அலுவலகங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் வட இந்தியர்களை அமர்த்தி, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் பச்சை துரோகம் இழக்கிறார் மோடி.

தமிழ் நாட்டு அரசு, தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தால், அதைத் தடுக்கப்பார்க்கிறார் மோடி; அதற்காக ‘உதய் மின் திட்டம்’ என்பதை அறிமுகப்படுத்துகிறார்.

தமிழர்களின் தொல் பெருமையை நிலைநாட்டும் அகழ்வாராய்ச்சிகளை தடுத்து நிறுத்தி, அந்த இடங்களை யெல்லாம் மூடி வருகிறார் மோடி.

இப்படி தமிழகத்தில் ஒரு தரப்பினரையும் ஒதுக்கி விடாமல், ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கும் கேடு விளைவித்து வருகிறது புது டில்லி கொத்தளம்.

பொய் சொல்வதற்கு கொஞ்சமும் அஞ்சாத மோடி, வருடத்திற்கு இரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று சொல்லி அட்சிக்கு வந்தபின் அதைப்பற்றி பேசவே மறுக்கிறார்; வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைச் சேர்ப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்பொழுது கடந்த எட்டு ஆண்டுகளாக அதைப் பற்றி பேச மறுக்கிறார்.

இந்த நிலையில், தமிழக மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தெளிவுபெறத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் கட்சி ஆனாலும் பாரதிய ஜனதாக் கட்சி ஆனாலும் வேறு எந்தக் கட்சி ஆனாலும் சரி, தனிப் பெரும்பான்மையுடன் புது டில்லியில் ஆட்சிக்கு வந்தால், மாநில உரிமைகளைப் பறிப்பதும் அந்தந்த மாநில மக்களின் நலனை சிதைப்பதும் என செயல்படுவதை உணர்கின்றனர்.

பாஜகவின் சாயமும் மோடியின் வித்தையும் மக்களுக்குத் தெரிந்து தெளிவுபெற்று விட்டதால், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.

அநேகமாக, ஒற்றைக் கட்சி ஆட்சி என்னும் அத்தியாயம் இந்தியாவில் முற்றுபெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியா என்பது ஒரு தனி நாடல்ல; அது தேசங்களின் தேசம் என்பதை புது டில்லி கோட்டைக் கொத்தளத்தில் இருப்போர் எண்ணிப் பார்க்க மறுத்து விடுகின்றனர்.

பல இனங்களைச் சார்ந்த, பன்மொழிகளைப் பேசுகின்ற, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள்தான், இந்திய மக்கள் என்பதை யெல்லாம் ஒதுக்கிவிட்டு, “ஒரே நாடு; ஒரே மொழி’ என்னும் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் மோடியைப் பற்றியும் பாஜக பற்றியும் வடவிந்தியம் முதல் தென்குமரி முனைவரை உள்ள மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.

2024 பொதுத் தேர்தலுக்குப் பின் புது டில்லி கொத்தளத்தை ஆளப்போகும் தலைவரை-பிரதமரை அடையாளம் காட்டப்போவது வேட்டி கட்டிய ஒரு தமிழரான மு.க. ஸ்டாலின்தான் என்று பேசப்பட்டு வருகிறது. 1996- பொதுத் தேர்தலுக்குப் பின், இந்தியப் பிரதமர் யார் என்பதை வேட்டி கட்டிய இரண்டு தமிழர்கள்(கலைஞர் மு.கருணாநிதி, ஜி.கே. மூப்பனார்) முடிவு செய்வார்கள் என்று ப.சிதம்பரம் சொன்னது இவ்வேளையில் நினைவுக்கு வருகிறது.

மு. க. ஸ்டாலினின் பிள்ளைகள் : செந்தாமரை ஸ்டாலின் – உதயநிதி ஸ்டாலின்

கர்நாடகத்தைச் சேர்ந்த தேவ கௌடா பிரதமர் ஆகும்முன், அந்த வாய்ப்பு முதலில் கலைஞரைத்தான் தேடி வந்தது; காலமெல்லாம் தமிழ்க் கடலில் முத்தெடுத்துக் கொண்டிருந்த கலைஞர் “என் உயரம் எனக்குத் தெரியும்” என்று சொல்லி விலகிக் கொண்டு, ‘கிங் மேக்கர்’ ஆனார்.

2024-இல் அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால், தந்தையைப் போல ஒதுங்கிக் கொள்ளாமல் உடனே தயாராக வேண்டும்; அதற்கான அடித்தளத்தையும் ஆயத்தையும் இப்பொழுது முதலே மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

காரணம், புது டில்லி செங்கோட்டையின் சிவப்புக் கம்பளம் தயாராகி வருவதற்கான கூறுகள் இப்பொழுதேத் தென்படுகின்றன.