துபாய் | 27/3/2022 :-

ஆட்சிக்கு வந்த ஓராண்டுக் காலத்தில் தமிழகத்தை மிகச் சிறந்த முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.


அவர்களுக்கு மலேசிய இந்தியர்களின் சார்பில் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் அறிவார்ந்த அமைச்சரவையை அறிவித்தது போற்றுதலுக்குரியது. அயலகத் தமிழர்களுக்கான ஒரு அமைச்சை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் தமிழர்கள் நல்வாழ்விற்கும் உத்தரவாதம் அளித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் அவர் ஆட்சிக்கு வந்த காலம், கொரோனா தொற்று உலகெங்கும் அதி வேகமாக பரவிக் கொண்டிருந்தது. அதைவிட தீவிரமாக செயல்களைத் தீட்டி,
தமிழ்நாட்டைக் கொரோனாவிலிருந்து விடுவித்ததோடு, புதிய பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்.
இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாற
பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

மலேசிய மற்றும் தமிழக உறவு இவர்களது காலகட்டத்தில் இன்னும் பலப்படும் என்பதோடு, புதிய பரிணாமங்களோடு பீடுநடை போடும் என்பதில் ஐயமில்லை.

தான் பதவியேற்ற காலகட்டத்தில் உலக நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் இயக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு அரசாக தமிழ்நாட்டு அரசு மாறியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு “தமிழ்த்தாய் விருது” வழங்கியமைக்கு என் மனமார்ந்த நன்றி. இன்று துபாய் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பொருளாதார முன்னேற்ற முயற்சி செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. உலக நாடுகளில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் சென்று அவர்களைச் சந்தித்து இது மாதிரியான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

மலேசியாவிற்கும் அவர்கள் வர வேண்டும் என்று மலேசிய இந்தியர்கள் சார்பில் எனது அழைப்பை விடுக்கிறேன். ஐக்கிய அரபு மாநாட்டில் துபாய் மண்ணில் இப்படி மிகப் பெரிய விழா எடுத்திருப்பதைப் பார்க்கும் பொழுது, உலகத்தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் ஓர் ஆட்சி தமிழ்நாட்டில் மலர்ந்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

துபாயில் நடைபெற்ற சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் வாழ்த்துரை.