கோலாலம்பூர் | 28/3/2022 :-
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 6வது பன்னாட்டு உள்நாட்டு புத்தகப் பரிசுப் போட்டிக்கான நிறைவு நாள், மார்ச் 31 என்பதால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் இலக்கியப் படைப்பாளர்கள் தங்களின் நூலை விரைந்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
2020 – 2021 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட மலேசியப் படைப்பாளர்களின் நூல்களும் வெளிநாட்டு படைப்பாளர்களின் நூல்களும் இப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
உலக அளவிலும் மலேசிய நிலையிலும் தரமான தமிழ்ப் புத்தகங்கள் வெளிவருவதை ஊக்குவிக்கவும் தமிழ்மொழிக்கும் பண்பாட்டுக்கும் பயன் விளைவிக்கும் சிறந்த நூல்களை அடையாளம் காணவும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியம், பன்னாட்டுப் புத்தகப்பரிசுப் போட்டியையும் உள்நாட்டு புத்தகப்பரிசுப் போட்டியையும் ஒருசேர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் நடத்துகிறது.
பன்னாட்டுப் புத்தகப் பரிசுத் தொகையாக 10,000 டாலரும் மலேசிய புத்தகப் பரிசுத் தொகையாக 10,000 வெள்ளியும் வழங்கப்படும் இந்தப் போட்டிக்கு சம்பந்தப்பட்ட இலக்கியப் படைப்பாளர்கள் தங்களின் நாவல், வரலாற்று நூல், ஆய்வு நூல், சிறுகதைத் தொகுப்பு நூல், கவிதைத் தொகுப்பு நூல் ஆகியவற்றை உடனே அனுப்பி வைக்கலாம்.
தமிழ்மொழியின் மாண்புக்கு அணிசேர்க்கும் இலக்கணம், தரமான உரைநடை, உயர்வான சொல்லாட்சி, தமிழிய மரபு ஆகியக் கூறுகளை உள்ளடக்கியதாக படைப்புகள் இருக்க வேண்டும்.
இலக்கியப் பார்வை, கலை மேம்பாடு, பண்பாட்டுக்கூறு, கல்வியின் மேன்மை, அறிவியல் தாக்கம், சமூகவியல், மனித அக மேம்பாடு, வாழ்வியல் நெறி போன்றவற்றை உள்ளடக்கிய நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
அதேவேளை, முனைவர் பட்டம் போன்ற கல்வித்தகுதிக்காக இயற்றப்படும் ஆய்வேடுகள், ஒரு படைப்பாளரின் சொந்த வரலாற்று நூல் போன்ற படைப்புகள் கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தால் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; ஏற்கெனவே வெளிவந்து இந்தப்போட்டிக்காக திருத்தி, மறு பதிப்பு செய்யப்பட்ட நூல்களும் இந்தப் போட்டியில் அனுமதிக்கப்படுவதில்லை.
குறிப்பாக, இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் நூல், ISBN பதிவை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் நூலின் அமைப்பு 14 செ.மீ X 21 செ.மீ என்ற அளவிலும் 200 பக்கங்களுக்கு குறையாமலும் 12 புள்ளிக்கும் குறையாத எழுத்துருவிலும் தரமான முறையில் அச்சிடப்பட்டும் இருக்க வேண்டும்.
நூலாசிரியரைத் தவிர, பதிப்பக நிறுவனங்கள்கூட தாங்கள் வெளியிட்ட நூலை சம்பந்த எழுத்தாளரின் அனுமதியோடு போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்; அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் நூல், போட்டியில் வென்றால் பன்னாட்டு பதிப்பகத்தாருக்கு 1000 அமெரிக்க டாலரும் மலேசிய ப் பதிப்பகத்தாருக்கு 1,000 வெள்ளியும் சன்மானமாக அளிக்கப்படும்.
ஒருவர் ஒரு நூலை மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்; போட்டியில் பங்கு பெறுவோர் 5 பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்கான நுழைவுப் படிவத்தை இணைக்க வேண்டும். http://tansrikrsomafoundations.nlfcs.com.my என்னும் அகப்பக்கத்திலிருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறவாரியம் மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவித்தபடி, மார்ச் 31-ஆம் நாளுக்குள் வந்தடையும் நூல்கள் மட்டுமே போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும். போட்டியாளரின் நூல் கிடைத்ததற்கான தகவல் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக பங்கேற்பாளருக்கு தெரிவிக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே போட்டி முடிவு குறித்து அறிவிக்கப்படும். போட்டிக்குறித்த முடிவுகள் பின்னர் அறவாரியத்தின் அகப்பக்கத்திலும் ஊடகங்களின் வழியும் அறிவிக்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்குபெறும் நூல்கள், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த 3 நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அவை, அறவாரிய உறுப்பினர்கள் அடங்கிய தெரிவுக் குழுவால் ஓருங்கிணைக்கப் பட்டு, பரிசுக்குரிய நூல் தேர்வு செய்யப்படும். எழுத்தாளரின் படைப்பாற்றலுக்கு 40% மதிப்பெண்ணும் மொழித் தரத்துக்கு 30% மதிப்பெண்ணும் விளைபயனுக்கு 30% மதிப்பெண்ணும் அளிக்கப்படும்.
எனவே, தமிழ் இலக்கியவாணர்கள் தங்களின் படைப்பை விரைந்து அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியம் கேட்டுக் கொள்கிறது.
மேல் விவரத்திற்கும் தொடர்புக்கும்:
DATUK B.SAHADEVAN PJN, SSA, PPT, ANS
Managing Director / Secretary
NATIONAL LAND FINANCE COOPERATIVE SOPCIETY
TanSri K.R.Soma Language & Literary Foundation
10th Floor, Wisma Tun Sambanthan, P.O.Box 12133, 50768 Kuala Lumpur.
கரு பன்னீர்செல்வம்(12 305 6799, 603 2273 1250)
தொலைநகலி:603 2273 0826
மின்னஞ்சல் முகவரி: kpselvam@nlfcs.com.my