கோம்பாக் | 23/7/2022 :-

மாவட்ட நிலையில் தமது கடுமையான முயற்சிக்குப் பிறகு மாநில நிலையிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் முன்னேறி இருக்கிறார் கோம்பாக் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அணுஶ்ரீ இரவிச்சந்திரன்.

ஐந்தாம் ஆண்டில் பயிலும் இவர் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் களம் புகுந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கும் இந்தியர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனும் நிலை மாறி ஶ்ரீ அபிராமியின் சாதனை உலளாவிய நிலையில் பெருமைக்குரியதானது.

அந்த வரிசையில் இப்போது ஜிம்னாஸ்டிக்கில் அடுத்தக்கட்ட வளர்ச்சியையும் சாதனையையும் பதிக்கக் கடுமையானப் பயிற்சி எடுத்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அணுஶ்ரீ இரவிச்சந்திரன்.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஆறு வயதில் இருந்து இந்த விளையாட்டில் ஈடுபட்டு வரும் அணுஶ்ரீயின் பயிற்சிகள் முடங்கின. இதனால், வீட்டில் இருந்த படியே, யூடியூப் காணொலி வழி சொந்தமாகப் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவரது இத்திறமையைக் கண்டறிந்த இப்பள்ளியின் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமை ஆசிரியை ரீத்தாவும் ஆசிரியை பாரதியும் இந்த இளம் திறமைசாலிக்கு ஒரு சரியான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றுள்ளனர்.

அந்த வகையில் MSSD கோம்பாக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதோடு அணுஶ்ரீ மாநில நிலைக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மகளின் இந்த வெற்றிக்கு வாய்ப்பளித்த புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமை ஆசிரியை ரீத்தாவுக்கும் ஆசிரியை பாரதிக்கும் அணுஶ்ரீயின் தாயார் தமது நன்றியைத் தெரிவித்தார்.