கிள்ளான், நவ.13-

  இவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு அவற்றிக்குத் தான் துணிவுடன் குரல் கொடுக்கவிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தீபக் ஜெய்கிஷான் கூறினார்.

  இரு தினங்களுக்கு முன்பு பண்டாமாரான் மற்றும் பண்டார் போத்தானிக்கில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சினைக்கு ஊராட்சி மன்றம் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது என்றார் பிரபல கம்பள வர்த்தகரான தீபக்.

  பொது மக்கள், வர்த்தகர்கள் என கிள்ளானில் உள்ள ஒட்டுமொத்த மக்களை வெள்ளம்  வெகுவாகப் பாதிப்பதால்  இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் துணிச்சல் மற்றும் பேச்சு சுதந்திரம் என்றால் என்ன  என்பதற்குச்  சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வேன்.இதன் வழி இங்குள்ள மக்கள் பயனடைவர் ” என்று இங்கு போர்ட் கிள்ளான், ஜாலான் பாப்பானில் , காலை  சந்தைக்கு வருகை புரிந்து வியாபாரிகளுக்கு பளூன்கள் மற்றும் தனது தேர்தல் பிரச்சார கையேடுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

  பல வாழ்க்கை  நிலைகளைக்  கொண்ட வியாபாரிகள் பல்வகை உணவு, புத்தம் புது மீன்கள், காய்கறிகள், பழ வகைகள், கோழி மற்றும் சீன பாரம்பரிய கேக் வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருவது தீபக்கை  (50)வெகுவாகக் கவர்ந்தது.

“இந்தச் சந்தைக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வருகை புரிவதை ஊக்குவிக்கும் வகையில் இதனை சுற்றுலா தலமாக சிலாங்கூர் அரசாங்கமும் சுற்றுலா துறையும் பிரபலப்படுத்த வேண்டும்” என்றார் தீபக். 

.”இது கிள்ளான் பெட்டாலிங்    ஸ் ரீட் போல்   திகழலாம்” என்று அவர் மேலும் சொன்னார்.

இத்தேர்தலில் தீபக் பெரிக்காத்தான் நேஷனல், பெர்சத்துவைச் சேர்ந்த பி.ஜெய சந்திரன், தேசிய முன்னணி, மசீசவின் தீ ஹூய் லிங், வாரிசானின் லூ செங் வீ, பிஆர் எம் எஸ்.சந்திர சேகர், பக்காத்தான் ஹராப்பான், ஜசெகவின் கணபதி ராவ் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஹெட்ரின் ரம்லி @ அவின் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.