கடமையை செவ்வனே ஆற்றுவீர்!நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

236

கோலாலம்பூர், மே 8-

மக்களின் பிரதிநிதிகள் எனும் தங்களின் கடமையைச் செவ்வனே ஆர்றும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் மக்களை நேரில் சந்தித்து தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபட வேண்டும் . இதைத் தவிர்த்து, பதவிக்காக எதையும் செய்யும் போக்கைக் கைவிட வேண்டும் என்று கெஅடிலான் வாங்சா மாஜூ டிவிஷன் தலைவர் என்றி லாய் கேட்டுக் கொண்டார்.

ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது முதல் இதனைக் கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.நடப்பு மலேசிய மடானி அரசாங்கம்  நிலையற்றது என்றும் இது எந்த நேரத்திலும் கவிழ்ந்துவிடக் கூடும் என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் .

நடப்பு அரசாங்கத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதற்காக பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன் வைக்கின்றனர். இன்றைய அரசாங்கம் மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டது என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

நாடு நிலைத்தன்மை பெற்றிருப்பதற்கு இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு மாமன்னர் நல்லிணக்கத்தையும் நல்லாசியையும் வழங்கியுள்ளார்.

ஷெரத்தோன் நடவடிக்கை போன்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இனியும் தொடரக் கூடாது .ஜொகூர் சுல்தானும் மாமன்னரின் வேண்டுகோளுக்கிணங்க  மக்கள், பொருளாதாரம், மற்றும் நாட்டின் வளப்பம் மீது கவனம் செலுத்தும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொண்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் தற்போது சமய மற்றும் இன விவகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை பச்சை அலை நன்கு உணர வேண்டும். 

இனத்தையும் சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டு  இவர்கள் பொது அமைதிக்கு எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றனர் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்.

அண்மையில் மலாய்க்காரர்களுக்கான பிரகடன சாசனத்தில் துன் டாக்டர் மகாதீருடன் ஒத்துழைக்க பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியைத் திரும்பப் பெறுவதற்காக இவர்கள் எந்தவிதமான குறுக்கு வழியையும் நாடலாம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும் என்பதை கெஅடிலான் கூட்டரசு பிரதேச  உதவி தலைவருமான என்றி லாய் சுட்டிக் காட்டினார்.