சிறுவன் திருமுருகன் விவகாரம்: அமைச்சர் சிவகுமார் உதவியோடு குடியுரிமை கிடைக்க டிரா மலேசியா கடும் முயற்சி!

93

புத்ரா ஜெயா மே 18-
அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் சிறுவன் திருமுருகனின் கல்வி பாதிக்காமல் இருக்க விரைந்து அவனுக்குக் குடியுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரின் உதவியோடு டிரா மலேசிய களம் இறங்கியுள்ளது.

இன்று புத்ரா ஜெயா ஐஒஐ lபேரங்காடியில் மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் மக்கள் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்த விக்னேஸ்வரன் தனது மகன் திருமுருகனுக்கு குடியுரிமை பெற்று தரும்படிக் கோரினார்.

திருமுருகன் பிறந்த பிறகு அவரின் தாயார் எங்கே போனார் என்று தெரியவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளாக தன் மனைவியை விக்னேஸ்வரன் தேடிக் கொண்டிருக்கிறார்.

முறையான பதிவு திருமணம் இல்லாததால் திருமுருகனுக்கு குடியுரிமை கிடைப்பதில் இப்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்போது ஆறு வயதாகி விட்ட திருமுருகன் அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் காலடி எடுத்து வைப்பதால் அவருக்கு குடியுரிமைக்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யும்படி டிரா மலேசிய இயக்கத்தின் தலைவர் சரவணனை மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

எக்காரணத்தைக் கொண்டும் இந்த சிறுவனின் கல்வி எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்றார்.

இதன் பொருட்டு திருமுருகன் விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தும்படி டிரா மலேசியாவை அவர் கேட்டுக் கொண்டார்.