தலைநகரில் விரைவில் ‘பயணம் தொடரும்’ இன்னிசை நிகழ்ச்சி

37

கோலாலம்பூர்,மே 23-

பதின்ம வயதினர் பங்கேற்கும் ‘பயணம் தொடரும்’ எனும் இன்னிசை நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸ், டெம்பள் ஆஃப் பைன் ஆஸ்ட்ஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

மலேசிய பாரம்பரிய கலை,கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்ச்சியில் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் தங்கள் பாடல் திறனை வெளிப்படுத்தவிருக்கின்றனர்.

மாலை மணி 5.00 தொடங்கி இரவு மணி 8.00 வரை நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் இவர்கள் 70 ஆம் ஆண்டு தொடங்கி தற்போதைய காலம் வரையிலான பாடல்களைப் பாடுவர் என்று மலேசிய பாரம்பரிய கலை,கலாச்சார சங்கத்தின் தோற்றுனர் திருமதி தேவி லெட்சுமணன் கூறினார்.

இந்த இசை நிகழ்ச்சி மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாது கலையிலும் சிறந்து விளங்குவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். அதே வேளையில், இது ஒரு போட்டி நிகழ்ச்சி அல்ல என்பதால் ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்தி, இருவராகவோ அல்லது குழுவாகவோ பாடுவதற்கான சூழலையும் உருவாக்குகிறது. இதன் வழி ஒருவர் மற்றவரின் உயர்வில் அக்கறை காட்டலாம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பதின்ம வயதினரின் முதல் இசை நிகழ்ச்சியைக் கடந்தாண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி தாங்கள் நடத்தியதாகவும் இதனைத் தொடர்ந்து 8 மாதங்களில் அடுத்தடுத்து மூன்று நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் இச்சங்கத்தின் தலைவருமான தேவி குறிப்பிட்டார்.

மே 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நான்காவது நிகழ்ச்சியில் அபிஷேக் பிரியன், சுருதி, தர்ஷன், சுவேதா, ரிஷ்வின் மற்றும் விஷாலினி ஆகிய அறுவர் பாடவிருக்கின்றனர். இசை லக்‌ஷன் வினோத்.

ஏரா டான்ஸ் குழுவினரின் கண்கவர் நடனம் மற்றும் மறைந்த பழம்பெறும் மலாய் நடிகர் பி.ரம்லியின் அங்கம் ஆகியவையும் இடம் பெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் சிறார்கள் அனைவரும் வெவ்வேறு இசை/ நடனப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் . பயிற்சி பெறுவதற்கு இவர்கள் அவ்வப்போது மலேசிய பாரம்பரிய கலை,கலாச்சார சங்கத்தின் கீழ் இயங்கும் ஹவுஸ் ஆஃப் இசை ஹெரிதாஜ் மையத்திற்கு வருகை புரிவர்.

பதின்ம வயதினர் ஒன்றிணைந்து படைக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் 600 பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிகழ்ச்சி வழி கிடைக்கப் பெறும் நிதி நாட்டிலுள்ள பி40 சிறார்களின் பரதநாட்டிய கட்டணத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

‘பயணம் தொடரும்’ நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு பொது மக்கள் 016-3494070 எனும் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது ‘ticket2u ‘ இணையம் வாயிலாகவோ பெற்றுக் கொள்ளலாம்.