பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்

105

சிப்பாங், மே 24-

இங்குள்ள பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவும்படி இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 30 மாணவர்களுடன்  சிறப்பாக இயங்கி வருகிறது.இப்பள்ளி மாணவர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு  பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில்,  இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ  முன்னாள் மாணர்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக டி.எச்.ஆர்.ராகா அறிவிப்பாளர் கவிமாறன் தெரிவித்தார்.

சிலம்ப மாஸ்டர்  டத்தோ சிவகுமாரின்  அழைப்பின் பேரில் பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த அவர் இப்பள்ளியின் மேம்பாட்டிற்குத் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கும்படி முன்னாள் மாணவர்களைக்  கேட்டுக் கொண்டார்.

“அழகான செம்பனைத் தோட்டத்தில் எல்லா வசதிகளோடு 30 மாணவ மாணவிகள்  இப்பள்ளியில் படித்து வருகின்றனர்”  என்றார் கவிமாறன்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில்  கவிமாறனோடு டத்தோ சிவகுமார், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும்  செப்டம்பர் 16 ஆம் தேதி  மலேசிய தின  பொது விடுமுறையையொட்டி முன்னாள்  மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று   ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

“பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம்,முன்னாள்  மாணவர் சங்கம் என அனைவரும் ஒற்றுமையுடன் சேர்த்து வேலை செய்து வருவது  மகிழ்ச்சியை தருகிறது . அதே சமயம்,நாள்தோரும் மாணவர்களுக்கு இலவச உணவுகளை நல்ல உள்ளம் படைத்த ஒருவர் வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சிப்பாங் மக்கள்  குறிப்பாக பியூட் தோட்டத்தில் வசித்த முன்னாள் மக்கள் அல்லது பள்ளியில் படித்த மாணவர்கள் ஒரு முறையாவது பள்ளிக்குத் தங்களால் முடிந்த   உதவிகளைச் செய்ய நேரடியாக  வருகை புரியும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புக்கு .

‘sjkt ladang bute sepang’ எனும் fb பாருங்கள், அல்லது  m.m.kavimaran tik tok வாயிலாகவோ, அல்லது  நேரடியாகவோ பள்ளி நேரத்தி்ல்  வருகை புரியலாம்.