கோலாலம்பூர்& சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் முயற்சி: டத்தோ இவோன் பாராட்டு

132

கோலாலம்பூர், மே 25-

நாட்டிலுள்ள வர்த்தக சமூகத்தினரின் நலனுக்காக   அரசாங்கம் வழங்கும்  மானியம்  மற்றும்  கடனுதவி திட்டங்கள் தொடர்பில்  மிகப் பெரிய  மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கும் கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர்  இந்திய வர்த்தக  தொழிலியல் சம்மேளனத்தின் முயற்சியை  தொழில் முனைவர் , கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் வெகுவாகப்  பாராட்டினார்.

வரும்  ஜூன் 9 ஆம் தேதி காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை தலைநகர், கொம்ளெக்ஸ் கெராஜாஹான், மெனாரா மிட்டி, பெர்டானா அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டை டத்தோ இவோன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

இம்மாநாடு தொடர்பில்  நிவாஸ் ராகவன் தலைமையிலான கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர்  இந்திய வர்த்தக  தொழிலியல் சம்மேளன செயற்குழுவினரை இவோன் நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

2023 மலேசிய மடானி பட்ஜெட்டின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்து இச்சாரார் அறிந்து கொண்டு பயனடைவதற்கு இம்மாநாடு நிச்சயம் துணை புரியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இம்மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சு முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதே வேளையில், 25 அரசாங்க  மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன்  கூட்டு சேர்ந்து  இதனை நடத்தும்  கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர்  இந்திய வர்த்தக  தொழிலியல் சம்மேளனத்தை நான் பாராட்டுகிறேன்” என்றார் இவோன்.

பல்வேறு தொழிற்துறைகளில் பரந்த அனுபவம் கொண்ட பேச்சாளர்கள் இம்மாநாட்டில் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.

 அதே சமயம், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் கண்காட்சி கூடாரங்களும் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றின் வழி 2023 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் மற்றும் கடனுதவி எங்கு உள்ளது. அதனை எப்படி பெறுவது  என்பது குறித்து வர்த்தகர்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இம்மாநாட்டிற்கான  கட்டணம் 150 வெள்ளியாகும். சிறப்பு கழிவு மே 26ஆம் தேதி வரை மட்டுமே என்பதால் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி வர்த்தகர்களை நிவாஸ்  கேட்டுக் கொண்டார்.

வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோர்,   சிறு வியாபாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், பெரிய வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பதிவுக்கு https://forms.gle/5dr13nW7zVPaUiqC9 . மேல் விவரங்களுக்கு 012-2561033 எனும் எண்ணில் வாட்சாப் செய்யலாம்.