ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் பதவி விலகல்: சிலாங்கூருக்கு பேரிழப்பு! மந்திரி பெசார் கூறுகிறார்

82

ஷா ஆலாம், ஜூலை 5-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநில தேர்தலில் தங்கள் தொகுதிகளைத் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை என்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் முடிவைத் தாம் மதிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் சாரி கூறினார்.

” என்னைப் பொறுத்தவரை இது சிலாங்கூருக்கு இழப்பாகும்.இம்மூவரும் இம்மாநிலத்திற்கு  அளப்பரிய பங்காற்றியுள்ளனர்”  என்றார் அமிருடின்.

“எனினும், திறமைமிக்க புதிய தலைவர்கள் சிலாங்கூரைத் தொடர்ந்து நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பினை இது  ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்”  என்று அமிருடின் மேலும்  சொன்னார். 

தெங் சாங் கிம் ( பண்டார் பாரு கிள்ளான்), டாக்டர் சித்தி மரியா மாமுட் (ஸ்ரீ செர்டாங்) மற்றும் வி.கணபதிராவ்( கோத்தா கெமுனிங்) ஆகிய  மூவரும் வரும் மாநில தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று இதற்கு முன்பு  அறிவித்தனர்.

தெங் முதலீடு, வர்த்தக,  தொழிற்துறை,  சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கும்  சித்தி மரியா பொது சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு துறைக்கும் கணபதிராவ் மாநில சமூக- பொருளாதார மேம்பாடு, சமூக நலம் மற்றும் தொழிலாளர் மேம்பாடு செயற்குழுவிற்கும் பொறுப்பேற்றிருந்தனர்.

கெடா, கிளந்தான், திரெங்கானு,பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில்  இம்மாதம் 29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும் . தேர்தல் ஆகஸ்டு 12 ஆம் தேதி ஏக காலத்தில்   நடைபெறும்  என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

-ஃபிரி மலேசியா டுடே