மாநில தேர்தல்கள்: மஇகா, மசீச போட்டியிடாது!

98

கோலாலம்பூர், ஜூலை  5 — 

தேசிய முன்னணியின் இரண்டு  முக்கிய உறுப்புக் கட்சிகளான  மஇகாவும் மசீசவும் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநில தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

தேசிய முன்னணிக்குத் தாங்கள் தொடர்ந்து விசுவாசமாக இருப்பதோடு தங்கள் ஆற்றலை அடுத்தப் பொதுத் தேர்தலுக்குத் தாங்கள் பயன்படுத்தவிருப்பதாக நேற்று  தனித்தனியாக வெளியிட்ட  அறிக்கையில் மஇகா தலைமைச் செயலாளர் ஆர்டி ராஜசேகரனும் மசீச தலைமைச் செயலாளர் டத்தோ சோங் சின் வூனும் தெரிவித்தனர். 

கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் கெடா, கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக ராஜசேகரன் கூறினார்.

“நடப்பு அரசியல் நிலை மற்றும் ஒவ்வொரு மத்திய செயலவை உறுப்பினரின் யோசனையையும் கருத்தில் கொண்டு சுமார் 4 மணி நேர விவாதத்திற்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

எனினும், தேசிய முன்னணியின் உறுப்பு கட்சி என்ற முறையில் தனது பங்கை அது ஆற்றும் என்றார் ராஜசேகரன்.

மஇகாவின் இந்த முடிவு குறித்து மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிடமும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அவர் மேலும் சொன்னார்.

கட்சி நலனைப் பாதுகாக்கவே வரும் மாநில தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. 16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் பொருட்டு கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்படும் என்றார்.

இதனிடையே,  நேற்று கூடிய மசீச மத்திய செயலவை கூட்டத்தில் கெடா, கிளந்தான்,திரெங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக   சோங் அறிக்கை ஒன்றின் வழி  குறிப்பிட்டார்.