கோலாலம்பூர் ஜூலை 9
வரும் 2024 ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகத் தாம் கருதுவதாக மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக சுக்மாவில் சிலம்பம் இடம் பெறவில்லை.
மேலும் பல ஆண்டுகளாக கபடியும் இடம் பெற முடியாமல் போனது.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ அகமட் பைசால் அமுசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆண்டு சுக்மாவில் சிலம்பம் இடம் பெற உதவினேன்.

2024 சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறவில்லை என்று செய்திகள் வெளியாகின.

இது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இவ்விரு போட்டிகள் அவசியம் சுக்மாவில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு பேரவை அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து குரல் கொடுத்தேன்.

அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் போட்டிகளாக சிலம்பம் மற்றும் கபடி விளங்குகின்றன.

“நிதி உட்பட பல காரணங்களைக் காட்டி எந்தவொரு போட்டியும் ஓரங்கட்டப்படக் கூடாது.அந்த வகையில் சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்” என்றார் அமைச்சர்.

இத்தகைய கடும் முயற்சிக்குப் பின்னர் சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் ஓய்எம்சிஏ மண்டபத்தில் இன்று மலேசிய சிலம்பக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுக்மாவில் கிடைத்த வாய்ப்பை மலேசிய சிலம்பக் கழகம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் ஏ. விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் 80 பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.