மாநில தேர்தல்: விவேகமான முடிவை எடுப்பீர்!வாக்காளர்களுக்கு டாக்டர் குணராஜ் ஆலோசனை

105

கிள்ளான், ஜூலை 19-

வரும் மாநில தேர்தலைப் பொறுப்புணர்வோடு அணுகுவதோடு  தங்கள் தேர்வின் மதிப்பைப் புரிந்து கொண்டு விவேகமான முடிவை எடுக்க வேண்டுமென  சிலாங்கூர் வாழ் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிளவுபட்ட அரசியலை நிராகரிக்கும் அதே வேளையில் சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் நிலைத்தன்மையுடனும் சுபிட்சத்துடனும் வாழ்வது அவசியம்  என்று முன்னாள் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  வலியுறுத்தினார்.

மாநில மற்றும் மக்களின் வருங்கால  வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில் முக்கிய முடிவை எடுக்கக்கூடிய ஒரு தேர்தலாக இது திகழவிருக்கிறது.

யாருக்கு வாக்களிப்பது எனும் விவகாரத்தில் ஒற்றுமை அரசாங்கத்தின் வாயிலாக  சிலாங்கூர் மாநிலத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்லும்  மற்றும் ஒற்றுமைப்படுத்தும் கூறுகள் மற்றும் கொள்கைகளை வாக்காளர்கள் கருத்தில் கொள்வது அவசியம்  என்று அறிக்கை ஒன்றின் வழி டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார். 

ஒற்றுமை அரசாங்கத்தின் வழி கிடைக்கப் பெறும் நிலைத்தன்மை மிக முக்கியம். அதோடு, இனவாதம் மற்றும் பிளவுபட்ட அரசியலின் ஆபத்துகள் பற்றியும்  அந்த அறிக்கையில்  அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 8 மாத ஒற்றுமை  அரசாங்கத்தின் ஆட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய பண்புகளையும்  சிலாங்கூர் மற்றும் மலேசியாவில் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடி மகிழும் போக்கையும்  காண முடிகிறது என்றார்.

மாநிலத்தின் பலம் பல்லின சமூகத்தின் ஐக்கியத்தின்பால் உள்ளதை பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி உணர்ந்துள்ளது. இந்திய, மலாய்க்கார, சீன மற்றும் இதர இனத்தவர்கள் சுபிட்சத்துடன் வாழ்ந்து வருவது இதற்குச் சான்றாகும்.

மக்களிடையிலான ஒற்றுமை மற்றும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பைக் கடைபிடிக்கும் பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி தனி நபரின் உரிமை மற்றும் பங்களிப்பைப் போற்றி மதிக்கிறது.

ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்வது, வெறுப்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் .

மலேசியாவின் பொருளாதார உந்துதல் சக்தியாக  சிலாங்கூர் விளங்குகிறது. ஒட்டுமொத்த நாடு பொருளாதார வளர்ச்சியும் வளப்பமும் பெறுவதற்கு சிலாங்கூர் சிறந்த நிர்வாகத்தைக் கொண்டிருப்பது மிக அவசியம். இம்மாநிலத்தை ஆட்சி புரிந்த மூன்று தவணைகளில் முன்னேற்றகரமான பொருளாதார கொள்கைகள், நீடித்த மேம்பாடு, முதலீடு, கட்டுமானம் மற்றும் வேலை வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தியதற்கான ஆதாரங்களை பக்காத்தான் ஹராப்பான் கொண்டுள்ளது.

நிலையான ஆட்சியுடன்  பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வது, தொழில் முனைவர்களை ஊக்குவிப்பது மற்றும் மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது  ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும்  மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி புசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி ஆகிய இருவரும்  வருங்காலத்தில் நாடு மற்றும் மாநிலத்தை நிர்வகிப்பதற்குரிய  தெளிவான இலக்கைக் கொண்டுள்ளனர். இவ்விருவரின் சீரிய தலைமைத்துவத்திற்கு நாம் தொடர்ந்து வாய்ப்பு அளிப்போம்.

நமது பிரதமர் மறுமலர்ச்சி நாயகன்.நீதி, ஜனநாயகம் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்குப் பேர் போனவர்.இவரின் தலைமைத்துவம் தேசிய நிலையில் புதிய மறுமலர்ச்சி சிந்தனைகளுக்கு வித்திட்டுள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் இலக்கு மற்றும் கொள்கைகளால் சிலாங்கூர் மற்றும் ஒட்டுமொத்த  நாடும்   பயனடைவதைக் காணலாம்.

நம்பகதன்மை மற்றும் சிறந்த நிர்வாகம் ஒற்றுமை அரசாங்கத்தின்  முக்கிய தூண். இதுவே பொதுச் சேவைத் துறையில் வெளிப்படைத் தன்மை, ஊழல் துடைத்தொழிப்பு மற்றும் நேர்மை ஆகிய பண்புகளை உறுதிப்படுத்துகிறது.

 பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூடிய ஒற்றுமை அரசாங்கத்தை நிலை நிறுத்துவதன் வழி பல்லினங்களுக்கிடையிலான கலந்துரையாடலை ஊக்குவிப்பதோடு சகிப்புத்தன்மை மற்றும் ஐக்கியத்தையும் வலுப்படுத்தலாம். 

வாக்குப் பெட்டியில் நாம் அளிக்கும் வாக்கு நமது மாநிலம், நாடு  ஆகியவற்றின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதோடு நமது வாழ்க்கையில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்பதை நினைவில் கொள்வோம்.