காஜாங் சட்டமன்றத்தில் பி.எஸ்.எம் அருட்செல்வன் போட்டி

93

காஜாங், ஜூலை 20-

    அடுத்த மாதம் நடைபெறவிருக்கும்  மாநில  சட்டமன்றத் தேர்தலில் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். கட்சியின் சார்பாக அதன்  துணைத் தலைவர் அருட்செல்வன்  களமிறங்கவிருக்கிறார்.

   புறக்கணிக்கப்பட்ட   சமூகத்தினரின் உரிமைகளுக்காகப் போராடுவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களைக் கொண்ட அருட்செல்வன், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒருவராகச் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குகிறார்.

   அவருடைய பலம் நகர்ப்புற ஏழைகள், தொழில்துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் ஆவர். இவர்களுக்குச் சேவை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வு இவருக்குள் ஆழமாகப் பதிந்துள்ளது. 

   காஜாங் தொகுதியில் போட்டியிடுவதில்லை என்று முன்பு பி.எஸ்.எம். முடிவெடுத்ததற்குக் காரணம் கடந்த 2008-2013ஆம் ஆண்டு கால கட்டத்தில் அத்தொகுதி வேட்பாளராக இருந்த காலஞ்சென்ற ஆசிரியர் லீ அவர்களுக்கு மதிப்பளிப்பதற்கு ஆகும். கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஊக்குவித்ததைத் தொடர்ந்து காஜாங் மக்களைப் பிரதிநிதித்து தான் இத்தொகுதியில் களம் இறங்குவதாக அவர் சொன்னார்.

   பி.எஸ்.எம். கட்சியின் இணைத் தோற்றுநர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் என்ற முறையில் கட்சியில் தாம் பெற்ற பல அனுபவங்கள் மற்றும் அறிவையும் பகிர்ந்து கொண்டார் அருட்செல்வன்.

 இவர் கடந்த 2008-2013 கால கட்டத்தில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினராகவும் சேவையாற்றி உள்ளார். இவர் சில முறை கைது செய்யப்பட்டது மட்டுமின்றி குற்றச்சாட்டப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

   இதில் அருளைத் தனது வேட்பாளராகக் கொண்டிருப்பதில் பி.எஸ்.எம். பெருமிதம் கொள்கிறது. ஒருவேளை காஜாங் சட்டமன்றத் தொகுதியில் தலைமையேற்கும் வாய்ப்பு பி.எஸ்.எம்.க்கு வழங்கப்பட்டால் மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு உண்மையான மற்றும் வெளிப்படையானத் தலைமைத்துவத்தை வழங்குவதில் அருட்செல்வமும் கட்சியினரும்  உறுதியாக இருக்கின்றனர். 

   அதனால் சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான  போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று அவர் மேலும் சொன்னார்.

காஜாங் சட்டமன்ற தொகுதியில் அருட்செல்வம் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை பி எஸ் எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் அவரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், நாசீர் மற்றும் கட்சியின் இதர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.