டூசுன் துவா, செமினி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்!

123

,

உலு லங்காட், ஜூலை 20-

    மாநிலச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு ஒற்றுமை அரசின் உலு லங்காட் தொகுதியின் கீழ் உள்ள டூசுன் துவா மற்றும் செமினி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இயந்திரம் நேற்று  பக்காத்தான்-தே.மு. கூட்டணியால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. 

   சிலாங்கூர், பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், கிளந்தான், திரெங்கானு ஆகிய 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு  மேற்குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான  தேர்தல் பிரச்சாரம் டேவான் ஸ்ரீ செம்பாக்கா டத்தாரான் டத்தோ முகமட் சையிட் பெரானாங், செமினியில்   தொடக்க விழா கண்டது.

   உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர், முகமட் சானி ஹம்சான்,  உலு லங்காட் அம்னோ தொகுதி  தலைவர்  டத்தோ வீரா ஜொஹான் அப்துல் அஜிஸ் மற்றும் அதன் உறுப்புக் கட்சிகளான அம்னோ, ம.சீ.ச., ம.இ.கா., ஐ.பி.எப். ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. பக்காத்தான் சார்பில் பி.கே.ஆர்., ஜ.செ.க., அமானா ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் சப்ரி சிக், ம.இ.கா உலு லங்காட் தொகுதி தலைவர் டாக்டர் செல்வராஜா, பிகேஆர் உலு லங்காட்  தொகுதி தலைவர் ராஜன் முனுசாமி, ஐபிஎஃப் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம். மோகன். இதன்   தேசிய இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன், டத்தோ கலையரசு காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் சந்திரன் ராமசாமி, ராமச்சந்திரன் அர்ச்சுணன், கிராமத் தலைவர் நடேசன் உட்பட   சுமார் 400  பேர் கலந்து கொண்டனர்.

   இதனிடையே முகமட் சானி ஹம்சான் மற்றும் டத்தோ ஜொஹான் ஆகியோர் உரையாற்றுகையில், உலு லங்காட் நாடாளுமன்றத்தில் டூசுன்  துவா, செமினி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவ்விரு தொகுதிகளையும் ஒற்றுமை அரசு இத்தேர்தலில்   நிச்சயம் கைப்பற்றும் என்று  அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

செமினி சட்டமன்ற  தொகுதியில்   அம்னோ தனது வேட்பாளரை நிறுத்துவதால்  இதன் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபடும்படி பக்காத்தான் – தேசிய முன்னணி உறுப்புக்  கட்சிகளின்  பொறுப்பாளர்களை இருவரும்  கேட்டுக் கொண்டனர்.