மீண்டும் செந்தோசாவில் வாய்ப்பு:கட்சிக்கு எனது நன்றி!டாக்டர் குணராஜ் ஜார்ஜ்

108

கிள்ளான், ஜூலை 25  –

வரும் தேர்தலில் என் 48 செந்தோசா தொகுதியில் தனக்குப் போட்டியிட வாய்ப்பளித்த கெஅடிலான் ராக்யாட் மலேசியா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்குத் தான் நன்றி கூறிக் கொள்வதாக டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் தான் பெருமையடைவதாக அவர் சொன்னார்.

நாட்டின் வளப்பத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் ஒற்றுமை அரசாங்கத்தின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை ஊக்குவிப்பதில் நான் அதீத ஈடுபாடு கொண்டுள்ளேன்.

“நாம் இப்போது தேர்தலின் முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம். இந்நிலையில் நமது இலக்கு நிறைவேறுவதற்கு ஓரணியாகத் திரளும்படி செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் குணராஜ்.

“உங்களின் ஆதரவும்  ஆக்கப்பூர்வ பங்களிப்பும் நமது தொகுதிக்கு மட்டுமல்லாது  நாட்டிற்கும் ஒளிமயமான எதிர்காலத்தைத் தரக்கூடியதாகும். நீதி மற்றும் சரிசமமான சமூகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மக்களின் நலன்கள் மீது அக்கறை காட்டும் பண்பு போன்றவற்றில் கடப்பாடு கொண்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம்” என்று அவர் மேலும் சொன்னார்.

“உங்கள்  வாக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியது. இதனைக் கருத்திற் கொண்டு வாக்களிப்பு தினத்தன்று நமது சட்டமன்றம் மற்றும்  நாடு ஆகியவற்றின் எதிர்காலத்தை எண்ணி விவேகமான முடிவை எடுக்கும்படி தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.