இளைஞர் மேம்பாட்டில் கவனம் செலுத்துவேன்!- கோத்தா கெமுனிங் வேட்பாளர் பிரகாஷ் உறுதி

159

ஷா ஆலம், ஜூலை 26-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் கோத்தா கெமுனிங் தொகுதியில் இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தாம் முன்னுரிமை அளிக்கவுள்ளதாக அத்தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளரான பிரகாஷ் சாம்புநாதன் தெரிவித்தார்.

இத்தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை வசதிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அதேவேளையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள பல்வேறு உதவித் திட்டங்களை பி40 தரப்பினர் குறிப்பாக இந்தியர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதை தாம் உறுதி செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு புக்கிட் கெமுனிங்கில் மலேசிய மறுசுழற்சிப் பொருள் சங்கத்தின் தலைவரும் மலேசிய செம்பிறைச் சங்கத்தின் கிள்ளான் மாவட்டப் பிரிவுத் தலைவருமான டத்தோ ஜோ. சரவணனுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.


இளைஞர்கள் வர்த்தகத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் வர்த்தகம் மற்றும் இலக்கவியல் முறையில் சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கான திட்டங்களையும் கொண்டிருக்கிறோம்.


எஸ்.பி.எம் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக உயர்கல்விக் கூடங்களின் ஒத்துழைப்புடன் இணையம் வழி கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்கள் சான்றிதழ் அல்லது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் .
மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறியாமல் இருக்கின்றன. இத்தகைய திட்டங்கள் அவர்களைச் சென்றடைவதை தாம் உறுதி செய்வதும் தனது நோக்கங்களில் ஒன்றாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்சனை, தமிழ்ப்பள்ளி மேம்பாடு, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பிரச்சனைகளையும் உரிய முறையில் கவனித்து தக்க தீரவினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“இத்திட்டங்களை நான் அமல்படுத்துவதற்கு கோத்தா கெமுனிங் தொகுதி வாக்காளர்களின் ஒருமித்த ஆதரவு எனக்குத் தேவை. இந்த தேர்தலில் அனைத்து இந்திய சமூகத்தின் ஆதரவையும் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்” என்றார்.