பத்துமலை, ஜூலை 29-
இவ்வட்டார இந்துக்கள் பயனடையும் வகையில் கோம்பாக் , புக்கிட் பெர்மாத்தாவில் மின் சுடலை அமைப்பதற்கு 3.9 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்தார்.
இதற்கு முன்பு இந்து இடுக்காட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தைப் பெறுவதற்கு நாம் மறுத்துவிட்டோம். அது பறிபோய்விட்டது. இப்போது பலரின் முயற்சியில் 3.9 ஏக்கர் நிலத்தை இந்து இடுகாட்டு மயானத்திற்காக செலாயாங் நகராண்மைக்கழகம் (எம்பிஎஸ்) ஒதுக்கீடு செய்துள்ளது என்று இவ்விவகாரம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
“இவ்வட்டார மக்களின் நலனுக்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்குச் சுற்று வட்டார ஆலயங்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இப்போது நாம் மின் சுடலை வசதிக்காக செராஸ் மற்றும் கம்போங் துங்குவிற்குச் செல்ல வேண்டியதாக உள்ளது. ஆகையால், இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் டான்ஸ்ரீ நடராஜா.
அதே சமயம், இத்திட்டத்திற்கு எல்லா இயக்கங்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இப்பகுதியில் மின் சுடலையின் தேவையை அனைவரும் அறிந்துள்ளோம். ஆகையால், இதனை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் . மாநில அரசாங்க பதிவேட்டில் இடம் பெறும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.என்றார்.
கோம்பாக் , புக்கிட் பெர்மாத்தாவில் மின் சுடலையை அமைப்பதற்கு செலாயாங் நகராண்மைக் கழகம் 2019 ஏப்ரல் மாதம் செய்த விண்ணப்பத்தை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அதே ஆண்டு டிசம்பரில் அங்கீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலத்தில் இந்து மயானம் அமைப்பதற்கு இஸ்லாமியர் அல்லாதோர்
விவகாரப் பிரிவு 2018 அக்டோபர் 30 ஆம் தேதி ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வட்டார மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இவ்வட்டாரத்தில் மின்சுடலை அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டை அங்கீகரித்த மாநில மந்திரி புசார் மற்றும் இக்கோரிக்கை நிறைவேறுவதற்கு முழு ஆதரவை வழங்கி வரும் டான்ஸ்ரீ நடராஜா ஆகியோருக்கு ஆலய மற்றும் அரசு சார்பற்ற இயக்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.