முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பணிகளைத் தொடர்வேன்!காஜாங் வேட்பாளர் டேவிட் சியோங்

124

காஜாங், ஜூலை 31-

காஜாங்  மக்களுக்கு இதன் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  ஹீ லோய் சியான் மன நிறைவான சேவையை வழங்கியிருக்கிறார். ஆகையால், வரும் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்றால் இவரின் பணிகளைத் தான் தொடரவிருப்பதாக காஜாங் வேட்பாளரரான  டேவிட் சியோங் கூறினார்.

இத்தொகுதி வேட்பாளர் எனும் வகையில் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு  ஹீ லோய் சியான் பேராதரவு வழங்கி   வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 “காஜாங்கில்  70 % வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு கண்டது உள்பட ஹீ லோய் சியான் காஜாங் மக்களின் நலனுக்காகப் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ளார். அவற்றை நான் தொடர்வதோடு முடிந்தால் மேலும் சிறந்த சேவையை ஆற்ற விரும்புகிறேன்” என்று இங்குள்ள கெஅடிலான் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்  விவரித்தார்.

இவ்வட்டார மக்களின் பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கு பல்லின மக்கள் கொண்ட குழுவினர் தனக்குப் பக்க பலமாக இருந்து  வருவதாகவும்   டேவிட் சியோங்  குறிப்பிட்டார்.

“இவ்வட்டாரத்தில் வறுமை  ஒழிப்பு திட்டம், சுற்றுலா மேம்பாடு போன்றவற்றோடு   மாநில அரசாங்கத்தின் மக்கள் நல திட்டத்தின் மீதும்   நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

காஜாங்கில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வருவார்களேயானால் இது குறித்து ஊராட்சி மன்றத்திடம் கலாந்தாலோசனை நடத்தி அதன் அமலாக்கத்திற்கான நடவடிக்கையை முன்னெடுப்பேன். இதன் வழி இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம் என்று டேவிட் சியோங் சொன்னார்.