ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஓரணியாகக் திரண்டு ஆதரவு தருவீர்!இந்தியர்களுக்கு வேண்டுகோள்

139

கோலாலம்பூர், ஆக.1-

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாட்டிலுள்ள இந்தியர்கள் ஒருமித்த சிந்தனையோடு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பக்காத்தான் ஹ்ராப்பான் – தேசிய முன்னணி மடானி அரசாங்கத்திற்கு இந்தியர்களின் ஆதரவைத் திரட்டும் பொருட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள்,  அரசு சார்பற்ற அமைப்புகளின் உயர் நிலை பொறுப்பாளர்கள் என 50 இந்திய தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை  தாங்கள்  நடத்தியதாக சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

இம்மாதம் 12 ஆம் தேதி  ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்தியர்கள்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என்று இங்குள்ள ரோயல் கிளப்பில் நடைபெற்ற இந்திய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

“இந்தியர்கள் மடானி அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். இதன் தொடக்கக் கட்டமே இந்திய தலைவர்களுடனான இன்றைய சந்திப்பு. இவர்கள் அனைவரும் தாங்கள் பிரதிநிதிக்கும் அமைப்புகளின் உறுப்பினர்களிடம் இதனை எடுத்துக் கூறி அவர்களின் ஆதரவைப் பெறுவர்” என்றார்.

இன்று கூடிய தலைவர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உறுப்பினர்களும் ஒன்றுகூடும் சிறப்புச் சந்திப்புக் கூட்டம் வரும் 4ஆம் தேதி காலை மணி 11.00 க்கு கிள்ளான், மிட்லண்ட்ஸ்  மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். இதில்  சிலாங்கூர் மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி கலந்து கொள்வார் என்றும் அவர் சொன்னார்.

வரும் மாநில தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைத் திரட்டும் தொடர் நடவடிக்கையாக சிரம்பானில் பணியில் ஈடுபடவிருப்பதாகவும் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தியாகோ குறிப்பிட்டார்.

:ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் பி40, எம்40 என அனைத்து நிலை  இந்தியர்களும்  பக்காத்தான் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற வேட்பாளரான டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்

“நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தமக்குப் புரிகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். வறுமை ஒழிப்பு, ஏழை, பணக்காரர் வேறுபாடு, சம்பள உயர்வு முதலிய பிரச்னைகள் உள்ளன. இவற்றிற்கு  பிரதமரால் ஆறு மாதங்களில்  தீர்வு காண முடியாது. அவருக்கு நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் “ என்றார்.

“மக்களிடையே காணப்படும்   பரம ஏழை பிரச்னைக்கு  இவ்வாண்டு இறுதிவாக்கில் தீர்வு காணலாம் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அவர் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாம் முழு ஆதரவை அளிப்போம் “ என்று அவர் வலியுறுத்தினார்.