மூத்த கட்சிக்கான மரியாதை வேண்டும்!டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

144

கோலாலம்பூர், ஆக.2-

நாட்டிலுள்ள இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தாய்க் கட்சி என்ற அடையாளத்தோடு நீண்ட காலம் தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வரும் மஇகாவிற்கு  இக்கூட்டணி மதிப்பளிப்பது அவசியம்  என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

“எங்களுக்கு அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் கூட மஇகா பிதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை.  இந்த நிலையிலும் கூட தேசிய முன்னணிக்கு ஆதரவாக நாங்கள் இருந்து வருகிறோம். ஆனால், மாநில தேர்தலில் எங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யாமல்  நாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம்” என்று மஇ கா  தலைமையகத்திற்கு சிறப்பு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்னிலையில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“கட்சித் தலைவர் எனும் வகையில் உறுப்பினர்களின் அதிருப்தியை நான் இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும்.பழம் பெரும் கட்சியான மஇகாவை  தேசிய  முன்னணி  குறிப்பாக அம்னோ மதிக்க வேண்டும். இவர்களின் மன உணர்வை பிரதமர்  மற்றும் துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜாகிட் ஹாமிடி   முன்னிலையில் நேரடியாக வெளிப்படுத்த  விரும்புகிறேன்” என்றார் விக்னேஸ்வரன்.

மஇகா தலைமையகத்திற்கு வருகை புரிந்ததன் வழி பிரதமர் இதன் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளார் .அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக வரும் மாநில தேர்தலில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக மஇகா முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றார்.

இன பேதமின்றி அனைவரும் ஒற்றுமையோடு  செயல்பட வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம். அவரின் வேண்டுகோளை நிறைவேற்ற மாநில தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் கோட்பாட்டின்படி மஇகா ஓரணியாக இருந்து வேட்பாளர்களின் வெற்றிக்காகப்  பாடுபடும். இதனை உறுதிப்படுத்த்  உறுப்பினர்கள் அனைவரையும் எழுந்து நின்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்களின் நலனுக்காக மஇகா பல ஆக்கப்பூர்வ திட்டங்களைத் தொடர்ந்து  செயல்படுத்தி வரும் வேளையில் பரம ஏழை பிரச்னைக்குத்  தீர்வு காணப் போவதாக பிரதமர் கூறியிருப்பது பாராட்டத்தக்கது.அவரின் இந்த இலக்கு நிறைவேற  மஇகா நிச்சயம்  தோள் கொடுக்கும் என்றார் விக்னேஸ்வரன்,