பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் மஇகாவின் முடிவு:இந்திய சமூகத்திற்கு நன்மையளிக்கும்!டாக்டர் குணராஜ் ஜார்ஜ்

115

கிள்ளான், ஆக.4-

வரும் மாநில தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக  மஇகா எடுத்திருக்கும் உறுதியான முடிவானது முக்கிய அரசியல் மாற்றத்தையும் நாட்டில் இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும்  குறிக்கிறது.

 மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரனின்  இந்த அறிவிப்பு இந்திய சமூகத்தினால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. காரணம் மற்ற விவகாரங்களைக் காட்டிலும் சமூகத்தின் நலனுக்கு கட்சி முக்கியத்துவம் அளித்துள்ளது என்று செந்தோசா சட்டமன்ற தொகுதியின்  பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்தார்.

ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெறும் மாநில தேர்தல்களில்  பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை  ஆதரிக்கும்படி கட்சி உறுப்பினர்களை விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டது கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஒன்றிணைந்து செயல்படும் உன்னத நோக்கத்தையே பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.

இது போன்ற ஒற்றுமையானது சமூகத்தின் குரல் அரசாங்கத்தில் ஒலிக்கவும் இவர்களின் நலன்கள்  அரசின் அனைத்து நிலைகளில் பிரதிநிதிப்பதையும் உறுதிப்படுத்தும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் சுட்டிக் காட்டினார்.

ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் முடிவு ஒட்டுமொத்த மலேசியாவின் நலனுக்காகப் பாடுபடும் நோக்கத்தையே பறைசாற்றுகிறது என்றார் இரண்டாவது தவணையாக செந்தோசா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் குணராஜ்.

இத்தகைய துணிகர மற்றும் கொள்கைபூர்வ முடிவானது இந்தியர்களிடையே  ஒற்றுமைக்கு வித்திடுவதோடு பல்லின சமூகத்தின்  வேற்றுமையில் ஒரே இலக்கான  ஐக்கிய மலேசிய கோட்பாட்டை விதைக்க  வழி வகுக்கும் என்றார்.