மற்றுமொரு இண்ராஃப் எழுச்சி வேண்டும்!-சார்லஸ் சந்தியாகோ

164

கிள்ளான், ஆக.5-

இந்நாட்டில் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் கட்டிக் காக்கப்படுவதை உறுதிப்படுத்த   இண்ராஃப் போன்ற அலை மீண்டும் எழ வேண்டும் என்று சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டு பிரஜைகள் என்று நம்மை அடையாளப்படுத்தும் குடியுரிமை பிரச்னை இனியும் இந்தியர்களிடையே  தலை தூக்கக் கூடாது.இதற்கு நாம் அனைவரும்  ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று இங்குள்ள மிட்லண்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இந்தியர் நலன் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

“இந்த நாட்டில் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்று  மத்திய அரசாங்க ரீதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் மாநில அரசாங்க ரீதியில் சிலாங்கூர் பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் வலையுறுத்தி வருகின்றனர்” என்றார் அவர். 

2007 ஆம் ஆண்டில் இண்ராஃப் இந்தியர்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.இதுபோன்ற சிந்தனை மாற்றம்  வரும்  மாநில தேர்தல்களில் மீண்டும் இந்தியர்களிடையே உருவாக வேண்டும் என்றார் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்லஸ்.

தற்போது ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான இந்தியர்களின் ஆதரவு 75 விழுக்காடு என்ற நிலையில் உள்ளது. இது 85 விழுக்காடாக அதிகரிக்கப்பட வேண்டும். இதற்காக ஆகஸ்டு 1 ஆம் தேதி இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், அரசு சார்பற்ற அமைப்புகளின் உயர்நிலை பொறுப்பாளர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பல துறைகளின் நிபுணர்களுடன் முதலாவது சந்திப்பு நடத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். 

இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட  அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற அமைப்புகள் , வர்த்தக நிறுவனங்கள்  போன்றவற்றைப் பிரதிநிதித்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிந்தார்.

தொடர்ந்து மேலும் இரு நிகழ்ச்சிகளை ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் நடத்தத்  தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும்  வரும் மாநில தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான இந்தியர்களின் பேராதரவைப் பெறுவதற்கான முயற்சியே இது என்றும் இக்கூட்டு செய்தியாளர் கூட்டத்தில்   செந்தோசா சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் குறிப்பிட்டார்

தங்களின் இதுபோன்ற தொடர் முயற்சிகள்  இத்தேர்தலில்  ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்தியர்கள்  பிளவுபடாத ஆதரவை வழங்குவதை உறுதிப்படுத்தும் என்றார் அவர்.

இதன் பொருட்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள  இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்கத் திரள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள்  வாக்களித்தார்களா , இல்லையா என்பது தேர்தலுக்குப் பின்னர் தெரிந்துவிடும். அரசாங்கம் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால்,  வாக்களிக்க வேண்டும் என்ற  தங்களின் கடமையை  நிறைவேற்ற வேண்டும் என்பது அவசியம் அல்லவா? என்றார் குணராஜ்.