பக்காத்தானுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்குவீர்!இந்தியர்களுக்கு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வேண்டுகோள்

96

ஷா ஆலம், ஆக.5-

இம்மாநில இந்தியர்களின் கல்வி, சமூக மேம்பாட்டில் மாநில அரசாங்கம் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.இந்நிலை இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. 

 சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலய மேம்பாட்டிற்காக மாநில அர்சாங்கம் ஆண்டுதோறும் மானியங்களை வழங்கி வருகிறது என்று மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில்  மாணவர்  தங்கும் விடுதி கட்டப்படுவதற்கு மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியதோடு இதன் பராமரிப்பு செலவீனத்திற்காக இவ்வாண்டு கூடுதலாக 3 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் இப்பள்ளி மண்டபத்தில் இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

இம்மாநிலத்தில் இந்தியர்களின் நலனுக்காக மாநில அரசாங்கம் பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வரும் மாநில தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களுக்கு முழு வீச்சில் இந்தியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

“நிலைத்தன்மையுடன்கூடிய ஓர் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே மக்கள் சுபிட்சத்துடனும் வளப்பத்துடனும் வாழ முடியும். ஆகையால், இத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணிக்கு மாநில இந்தியர்கள் பேராதரவு வழங்க வேண்டும்” என்று சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் ஏற்பாட்டிலான நிகழ்ச்சியில் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.

“நாடும் மக்களும் வளம் பெற சிறந்த நிர்வாகமும், நிலைத்தன்மையும் கூடிய ஓர் அரசாங்கம் தேவை.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நீடித்த பொருளாதார வளர்ச்சியில் மக்களையும் உட்படுத்த விரும்புகிறது.இதற்கு மாநில தேர்தல்கள் மிகவும்  முக்கியமானவை.இந்தியர்கள் இதனை உணர்ந்து இக்கூட்டணிக்கு முழு  ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.