பிந்தாங் மின்னல் 2023:அறுவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு!

74

கோலாலம்பூர், ஆக.5 –

 பாடும் திறன் கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மின்னல் எஃப் எம் ‘மின்னலின் இன்னொரு பிரமாண்டம்  பிந்தாங் மின்னல்  2023′ பாடல் திறன் போட்டியை நடத்தியது.

அவ்வகையில் அங்காசாபுரி , பி.ரம்லி அரங்கில் இன்று பிற்பகலில்  நடைபெற்ற அரையிறுதி சுற்றில் அறுவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றனர்.

சுவேதா நாயர் கிருஷ்ணகுமார், ஜீவா ஜெயகோபி, நிமலன் கங்காதரன், சுருதி கேசவராஜன், ராஜஸ்ரீ கோபி மற்றும் பரத் நாயர் ஸ்ரீதரன் ஆகியோரே  அவர்கள் . 

250திற்கும் மேற்பட்ட காணொளிகளிலிருந்து 12 போட்டியாளர்கள்  ஆகஸ்டு 5ஆம் தேதி  பிந்தாங் மின்னல்  2023இன்  அரையிறுதி சுற்றுக்குத் தேர்வானார்கள். 

அரையிறுதி சுற்றில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் முறையே மலாய் மற்றும் தமிழ் மொழியில் பாடல்களைப் பாடினார்கள். இவர்களில் மேற்குறிப்பிட்ட  6 போட்டியாளர்கள் வெற்றிகரமாக இறுதி சுற்றுக்குத் தேர்வாயினர்.

இறுதிச் சுற்றுக்கான இந்த 6 போட்டியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை 3 நீதிபதிகள் மேற்கொண்டனர்.மலேசிய இசைத்துறையில் பிரபலமான  இசைக் கலைஞர் லாரன்ஸ் சூசை, இளைஞர்களின் சமீபத்திய  ரசனைக்கேற்ற இசையை வழங்கிக் கொண்டிருக்கும் ஷித்திஷ் மற்றும் 34 ஆண்டு காலம் கர்நாடக இசைத் துறையில் பவனி வரும்  தாரணி தேவி தண்டபாணி ஆகியோரே அம்மூவர்.

முன்னதாக, நடைபெற்ற போட்டியாளர்களின்  மலாய் மொழி பாடல்களுக்கு ஆர்டிஎம் இசைக்குழு கலைஞரும், மலாய் இசைக் கலைஞருமான ராஜா முகமட் ஷாம் ராஜா ஷாரி நீதிபதியாகச் செயல்பட்டார்.

தெய்வீகன் தாமரைச் செல்வன் , சுகன்யா சகாசிவம்  ஆகிய இருவரின் விறுவிறுப்பான அறிவிப்பில் மலர்ந்த பிந்தாங் மின்னல்   2023இன் அரையிறுதிச்சுற்று நிகழ்ச்சியில்  மின்னல் எஃப்எம் நிர்வாகி ரோகிணி சுப்ரமணியம் கலந்து  கொண்டார்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான போட்டியாளர்களுக்கு மின்னல் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. பிந்தாங் மின்னல் 2023இன் இறுதிச்சுற்று செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.