விஸ்மா மைபிபிபி விவகாரம்:கேவியஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்!டத்தோஸ்ரீ மெக்லின்

242

கோலாலம்பூர், ஆக.7-

 மைபிபிபி கட்டடத்தைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் புறக்கணித்து வரும் டான்ஸ்ரீ எம். கேவியஸுக்கு எதிராக தாங்கள்  சட்ட நடவடிக்கை எடுக்கத்  தயாராக இருப்பதாக  மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டெனிஸ் டி குருஸ் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி தலைநகர், கம்போங் அத்தாப்பில் உள்ள  மைபிபிபி கட்டடத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு தனது சொந்த அலுவலகம் போல் கேவியஸ் நடத்தி வருவதாக  இங்கு  கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மெக்லின் கூறினார்.

இந்தக் கட்டடம் மைபிபிபி கட்சிக்குச் சொந்தமானது என்றும் கடந்த 2019 ஜனவரி 14ஆம் தேதி மைபிபிபி பதிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது திவால் துறை தலைமை இயக்குநரின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தக் கட்டடம்  மைபிபிபியின் சொத்து என்றும் கட்சியின் முதலீட்டு கரமான பிந்தாங் இராடாட் நிறுவனத்தின் பங்குகள் வழி இது இயங்குகிறது என்றும் 2019 ஜனவரி 16 ஆம் தேதி உயர்நீதிமன்றம்  அளித்த தீர்ப்பில் கூறப்பட்டது.

கட்சியின் மூத்த உதவி தலைவராக இருந்த மெக்லின் இந்நிறுவனத்தின்  அப்போதைய இயக்குநர் ஆவார்.  இவரோடு தலைமைச் செயலாளராக இருந்த   டத்தோ மோகன் கந்தசாமி  மற்றும் பொருளாளராகப் பொறுப்பு வகித்த டத்தோ லாவ் பெங் வெய் ஆகியோர் இதன் முதலீட்டாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில், கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிந்தாங் இராடாட் நிறுவனத்தின் 100,000 பங்குகள் திவால் துறை தலைமை இயக்குநரின் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில்  இருக்க வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளான  மைபிபிபி கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் கேவியஸ்,கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்,டத்தோ சந்திர குமணன், டத்தோ லாய் கிம் சியோங் அல்லது அவரின் எந்தவொரு  நிறுவனமோ அல்லது பணியாளர்களோ இந்தக் கட்டடத்தின் சொத்தை பெயர் மாற்றம் செய்வது,விற்பனை செய்வது,அடமானம் வைப்பது அல்லது அழிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து கேவியஸ் இரு முறை செய்த மேல் முறையீட்டை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இக்கட்சியின் பதிவு  2019 ஜனவரி 14 ஆம் தேதி  நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மைபிபிபி சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை உயர்நீதிமன்றம் திவால் துறை தலைமை இயக்குநரிடம் ஒப்படைத்தது.

உள்துறை அமைச்சு மற்றும் சங்கப் பதிவிலாகாவின் கடிதம்  வாயிலாக  2023 ஏப்ரல் 11 ஆம் தேதி கட்சி மறுபதிவு செய்யப்பட்டதையடுத்து இதன்  சட்டப்பூர்வ தலைவராக தான் அங்கீகரிக்கப்பட்ட வேளையில்  புதிதாக நியமிக்கப்பட்ட  உச்சமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மெக்லின் இச்செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, வரும் 12 ஆம் தேதி ஆறு மாநிலங்களில்  நடைபெறும் தேர்தல்களில் மைபிபிபி உறுப்பினர்கள்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராமின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களுக்கு  முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக  அவர் சொன்னார்.