புக்கிட் கெமுனிங் வட்டார அடிப்படை வசதிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்!பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பிரகாஷ்உறுதி

115

ஷா ஆலம், ஆக 7-

கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாக  புக்கிட்
கெமுனிங் வட்டாரத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் பிரச்சனைக்கு
உரிய தீர்வு காணப்படும் என்று அத்தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான்
வேட்பாளர் எஸ்.பிரகாஷ் வாக்குறுதியளித்துள்ளார்.

வரும் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில்
இவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து
அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக
அவர் தெரிவித்தார்.

இத்தொகுதியில் உள்ள சில பிரச்சனைகள் எனது கவனத்திற்குக் கொண்டு
வரப்படுள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் நான்
தீவிரமாக ஈடுபடுவேன். அதற்கு முன்பாக இந்த தேர்தலில் வெற்றி
பெறுவதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.

இங்குள்ள புக்கிட் கெமுனிங் 8 ஆவது மைல், ஸ்ரீ காளியம்மன்
ஆலயத்தில் நடைபெற்ற கோத்தா கெமுனிங் வட்டார சமூகத் தலைவர்கள்
மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது
அவர் இவ்வாறு சொன்னார். இந்த நிகழ்வில் கிள்ளான் தொகுதி முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, மலாக்கா காடேக்
தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், தொழிலதிபர்
டத்தோ அ.கணேசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி
தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்திய சமூகம்
திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் கேட்டுக்
கொண்டார்.

இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறாவிட்டால்
இந்திய சமூகம் தனது அடையாளத்தை இழந்து விடக்கூடிய அபாயம்
உள்ளதாக கூறிய அவர், இளைஞர்கள் குறிப்பாக 18 வயதுக்கும்
மேற்பட்டவர்கள் இத்தேர்தலில் தவறாது வாக்களிப்பதை பெற்றோர்கள்
உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின்
வாயிலாக இந்திய சமூகம் பல்வேறு அனுகூலங்களை பெறுவதற்குரிய
வாய்ப்பு உள்ளது. மத்திய அரசாங்கம் வலுவுடன் இருப்பதை உறுதி செய்ய
மாநிலங்களை ஹராப்பான் கூட்டணி கைப்பற்றுவது அவசியமாகும். நாம்
வாக்களிக்களிப்பதை தவிர்த்தால் இன, மத விவகாரத்தை எழுப்பி
பிரித்தாளும் போக்கை கடைபிடிக்கும் பெரிக்காத்தான் நேஷனலின்
வெற்றிக்கு நாமே மறைமுகமாக உதவியவர்களாக ஆகி விடுவோம்
என அவர் எச்சரிக்கை விடுத்தார்.