தீபன் சுப்பிரமணியத்தை வெற்றி பெற செய்வீர்! அமைச்சர் சிவகுமார் பிரச்சாரம்

76

புக்கிட் ரோத்தான், ஆக 7-
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க இந்திய பிரதிநிதிகள் தேவை என்பதால் தீபன் சுப்பிரமணியம் போன்ற இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு புக்கிட் மெலாவாத்தி வாக்காளர்களை மனித வள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நமக்கு இந்திய பிரதிநிதிகள் கண்டிப்பாக தேவை.

அந்த வகையில் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த தீபன் சுப்பிரமணியத்தை அமோக வெற்றி பெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மற்றும் வீ கணபதிராவ் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து சிறப்பாக சேவையாற்றி இருக்கிறார்கள்.

மேலும் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பான முறையில் சமுதாயத்திற்கு சேவையாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

புக்கிட் மெலாவாத்தியில் போட்டியிடும்
துடிப்புமிக்க இளைஞரான தீபன் சுப்பிரமணியம் ஒரு பட்டதாரி ஆவார்.

சிலாங்கூர் மாநில இந்தியர் தொழில் முனைவோர் உருமாற்ற திட்டத்தின் அதிகாரியாக பணியாற்றி இந்தியர்களுக்கு அதிக அளவில் சேவையாற்றி இருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக புக்கிட் மெலாவாத்தி விளங்குகிறது.

புக்கிட் மெலாவாத்தியில் உள்ள இந்தியர்கள் பிளவுபடாத ஆதரவை தீபன் சுப்பிரமணியத்திற்கு வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று கோலசிலாங்கூர் புக்கிட் ரோத்தான் தாமான் ராஜாவளி சுங்கை பூலோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

தீபன் சுப்பிரமணியத்தை ஆதரித்து அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் புவான் ரோட்சியாவும் தீவிர பிரச்சாரம் செய்தார்.

குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜூவும் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.