வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வீர்!இந்தியர்களுக்கு சார்லஸ் சந்தியாகோ வேண்டுகோள்

55

பெட்டாலிங் ஜெயா, ஆக.8

இன்னும் நான்கு தினங்களில்  நடைபெறவிருக்கும்  மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியர்கள் தங்களின்  வீடுகளை விட்டு வெளியேறி வாக்களிப்பது அவசியம்  என்று முன்னாள் கிள்ளான் நாடளுமன்ற  உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முற்போக்கான சம்பள முறையை உட்படுத்திய   மடானி பொருளாதார திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.இதற்கு ஆறு மாநில மக்கள் உட்பட  நாட்டு மக்களின் ஆதரவு  முக்கியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதனைக் கருத்திற் கொண்டு இத்தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வீட்டை விட்டு வெளியேறும்படி இந்தியர்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களில் சுமார் 77 விழுக்காட்டினர்  குறைந்தபட்ச மாத சம்பளமாக 2,500 வெள்ளியைப்  பெறுகின்றனர்.இந்நிலையை  மடானி பொருளாதார திட்டம் மாற்றும். இதற்கு மாநில தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள்  மிக முக்கியம் என்று இத்தேர்தல்களில்  ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று  இங்குள்ள உணவகம் ஒன்றில் அரசு சார்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பையொட்டி நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.

வரும் 12 ஆம் தேதி  நடைபெறவிருக்கும் மாநில தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். இதற்கு தற்போது 75 விழுக்காடாக இருக்கும் இந்தியர்களின் ஆதரவு 85 விழக்காட்டைத் தாண்ட வேண்டும் என்றார் இச்சந்திப்பை ஏற்பாடு செய்த சிலாங்கூர் இந்திய ஆலோசகர் மன்றத்தின் (எஸ்ஐ சிசி) தலைவருமான சார்லஸ்.

இத்தேர்தல்களில் இந்தியர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் வளமான மற்றும் நிலையான பொருளாதார மேம்பாட்டை வழங்கக்கூடிய ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை ஆதரிக்கும்படி இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட செந்தோசா சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் இந்திய வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் இந்திய ஆலோசகர் மன்றத்தின் சார்பில்  எஸ்.பி.நாதன், கிரேஷ், பொருளாதார நிபுணர் மனோகரன் மொட்டையன் ஆகியோரோடு கோபியோ அமைப்பைச் சேர்ந்த ரவியும் கலந்து கொண்டார்.

இவர்கள் அனைவரும்  ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆக்கப்பூர்வ கருத்துகளை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது