குடும்ப & நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு வாக்களிப்பீர்! -டாக்டர் குணராஜ் வேண்டுகோள்

164

கிள்ளான், ஆக 10-.

வரும் மாநில தேர்தல்களில் தனி நபரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்காது குடும்பம் , சமூகம் மற்றும்  நாட்டின் சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு வாக்களிக்கும்படி வாக்காளர்களை  செந்தோசா சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்.

சகோதரத்துவத்தை நிலைநாட்டுதல், நியாயமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல் போன்ற உயர் நெறிகளைக் கொண்ட ஒற்றுமை அரசாங்கத்திற்கு மக்கள் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என்றார் குணராஜ்.

மீண்டும் சிலாங்கூர் அரசாங்கத்தில் மக்களின் குரலாக  தான் ஒலிப்பதற்கு ஒரு வாய்ப்பு தரும்படி வாக்காளர்ளை அவர்  கேட்டுக் கொண்டார்.

மக்கள் நலன், ஐக்கியம் மற்றும் பாதுகாப்பும், வளமும் நிறைந்த ஒரு நகராக செந்தோசாவை மாற்றுவது முதலியவை  தொடர்பான மக்களின் உள்ளக் குமுறல்களை  தான் முழு கடப்பாடோடு நிறைவேற்றத்  தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார். 

செந்தோசாவில் பல்வேறு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைப்பு, , அடிப்படை வசதிகள் ஒருங்கிணைப்பு,சுகாதார மற்றும் கல்வி திட்டங்கள்  அதிகரிப்பு, சமூக நல திட்டங்கள் முதலியவை இவற்றில் அடங்கும்

இதற்காக அரச மலேசிய போலீஸ் படை, தீயணைப்பு படை, மாவட்ட சுகாதார இலாகா, மாவட்ட கல்வி இலாகா,கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனம், பொது மக்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் ஆலய மற்றும் பள்ளிவாசல்களின் தலைவர்கள்,தொண்டூழிய படையினர் மற்றும் கடப்பாடுமிக்க பணியாளர்கள் ஆகியோருக்கு  அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும்  சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றியமைப்பதில் 5 நட்சத்திர அந்தஸ்தைப் பதிவு செய்துள்ளது. இதன் வழி மாநிலத்தை சிறந்த முறையில் நிர்வகிக்கும் தனது ஆற்றலை  இது நன்கு நிரூபித்துள்ளது.

அதே வேளையில்,  நடப்பு பக்காத்தான் ஹராப்பான்  மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையின் கீழ்   வாழ்க்கைச் செலவீனம் மற்றும் பண வீக்கம் குறைந்து நாடு மற்றும் மக்கள் வளமான வாழ்க்கையைப் பெறுவர் என்றார்.

“இதன் பொருட்டு இந்த மாநிலத் தேர்தல்களில்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும்  ஒற்றுமை அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும்படி வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் குணராஜ்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் வழி மலேசியாவை உலக பிரசித்தி பெற்ற நாடாகத் திகழச் செய்ய பக்காத்தான் ஹராப்பான்   மற்றும் தேசிய முன்னணிக்கு  நாம் அதிகாரத்தை வழங்குவோம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.