கோலாலம்பூர், செப்.7-
ஜெனிரா கிரியேட்டிவ் புரோடக்ஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மக்கே ரெடி – ஆ இது நம்ம நேரம்’ மலேசிய இந்திய இசையின் சங்கமம் எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று தலைநகரில் விரைவில் நடைபெறவிருக்கிறது.
வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஜெப் கோலாலம்பூர் அரங்கில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி ரசிகர்களைக் கவரும் வகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் என்று ஜெனிரா கிரியேட்டிவ் புரோடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி காயத்ரி தண்டபாணி கூறினார்.
டார்க்கி, காஷ்மீர் ஸ்டோன், லோக்காப்,சந்தேஷ், திலிப் வர்மன், ஹெர்லின் போன்ற முன்னணி கலைஞர்களோடு வளர்ந்து வரும் கலைஞர்களும் இடம் பெற்றிருப்பர் என்று இங்குள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.
உள்ளூர் கலைஞர்களின் அபார திறமையை இந்நிகழ்ச்சி வழி ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அதோடு, மனதுக்கு மனநிறைவான மற்றும் இனிமையான ஒரு மாலைப் பொழுதை இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாலை 5.00 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு நீடிக்கும் இந்த இசை நிகழ்ச்சி உள்நாட்டு இசை மற்றும் கலாச்சார கொண்டாட்டமாக அமைந்திருக்கும் என்பது நிச்சயம் என்றார் காயத்ரியின் சகோதரியான வாணி ஸ்ரீ.
முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு படைக்கப்படும் இந்த இசை நிகழ்ச்சிக்கு 2,000 பேர் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்ரி பிரபல உள்ளூர் இசைக் கலைஞர் தண்டபாணியின் புதல்வி ஆவார். தனது சகோதரி வாணிஸ்ரீயோடு இணைந்து முதன் முறையாக இவர் படைக்கும் ‘மக்கே ரெடி – ஆ இது நம்ம நேரம்’ இசை நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக வருகை தந்து ஆதரவு தரும்படி ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலைஞரும் காயத்ரி மற்றும் வாணிஸ்ரீயின் தந்தையுமான தண்டபாணி, லோக்கப் நாதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
அதே வேளையில், நிகழ்ச்சி ஆதரவு நிறுவனங்கள் சிறப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளின் விலை 129 வெள்ளி தொடங்கி 399 வெள்ளி வரை ஆகும் . இவற்றை Ticket 2u.com.my வழி ரசிகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.