கோலாலம்பூர், செப்.10-
ஜொகூர் பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெற்ற வெற்றியானது இக்கூட்டணி மீது மக்கள் கொண்ட நம்பிக்கையையேக் காட்டுகிறது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.
ஜொகூர் மாநில மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள். எதிர்க்கட்சியினரின் அவதூறு அரசியலுக்கு இவர்கள் மதி மயங்கவில்லை. தங்களின் நலனைப் பாதுகாக்கக் கூடியது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியே என்பதை இவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்றார் துணைப்பிரதமர்.
தொடக்கத்தில் ஆளும் கட்சியின் வேட்பாளர் எதிர்க்கட்சியினரின் எதிர்மறையான பிரச்சாரத்தினால் மிகச் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது எங்களுக்குச் சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது என்று தலைநகர் , உலக வர்த்தக மையத்தில் மக்கள் சக்தி கட்சியின் 15ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் பூலாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுஹாய்சான் காயாட் 18,641 வாக்குகள் பெரும்பான்மையிலும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நஸ்ரி அப்துல் ரஹ்மான் 3,514 வாக்குகள் பெரும்பான்மையிலும் வெற்றி பெற்றனர்.
” டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கமே நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது என்பதை ஜொகூர் மாநில மக்கள் அறிந்துள்ளனர்” என்றார் அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவருமான ஜாஹிட்.
“பூலாயில் இரண்டு, 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. 18,000 திற்கு அகிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அதே சமயம், சிம்பாங் ஜெராமில் 3,000 திற்கு மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வாகை சூடியுள்ளோம்” என்றார்.
இதனிடையே, தேசிய முன்னணி மீது மக்கள் சக்தி குறிப்பாக இக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கொண்ட விசுவாசத்தைப் பாராட்டிய துணைப்பிரதமர் , முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தீவிர ஆதரவாளரான தனேந்திரன் முன்னாள் பிரமரின் ஒவ்வொரு வழக்கு விசாரணையின்போதும் நீதிமன்றத்திற்கு வருகை தருவது முன்னாள் பிரதமர் மீதான அவரின் நன்மதிப்பைப் புலப்படுத்துவதாகச் சொன்னார்.