மக்கள் சக்தி மாநாடு: 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

38

கோலாலம்பூர், செப். 10-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான நடப்பு மடானி அரசாங்கத்திற்குப் பிளவுபடாத ஆதரவு வழங்குவது உட்பட நான்கு தீர்மானங்களை  மக்கள் சக்தி கட்சி தனது மாநாட்டில் நிறைவேற்றியது.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹாமிடிக்கும் தங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை  விரைவில் விடுதலை செய்ய  வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை ஆகும் என்று இங்கு  மக்கள் சக்தி கட்சியின்  15 ஆவது மாநாடு நேற்று துணைப்பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

டத்தோஸ்ரீ நஜீப் தவறாக தண்டிக்கப்பட்டு வருகிறார். இது தொடர்பில் விசாரணை நடத்த அரச விசாரணை ஆணையம் அமைப்பதற்கு   அமைச்சரவை  அங்கீகரித்துள்ளது. ஆகையால், நஜீப் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இந்தியர்களின் உரிமை குறித்து யாரும் கேலி செய்யக்கூடாது. வந்தேறிகள் என்று யாரும் நம்மை கூறுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறியதற்காக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இந்தியர்களிடமும் சீனர்களிடமும் அவசியம்  மன்னிப்பு கேட்க வேண்டும். 

மக்கள் சக்தி கட்சிக்கு மேலவையில் செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை ஆகும். மக்களின் பிரச்னைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல கட்சியின் பிரதிநிதித்துவம் மேலவையில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் தனேந்திரன். 

இதனிடையே, மக்கள் சக்தி கட்சி மாநாட்டில் மஇகா, மசீச, மைபிபிபி, கிம்மா, ஐபிஎஃப் உள்ளிட்ட தேசிய முன்னணி மற்றும் இதன் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்குச் சேவையாற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக அவர் விவரித்தார்.