கோலாலம்பூர் அக் 29-
இங்குள்ள லெபோ அம்பாங் பாரம்பரிய இந்திய வர்த்தக சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் முன் வைக்கவிருப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவைப் போல் லெபோ அம்பாங் அழகுபடுத்தப்பட வேண்டும்.
இங்கும் அலங்கார தூண்கள் நிறுவப்பட வேண்டும் என்று லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த லெபோ அம்பாங் தொடர்ந்து இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக தளமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் இந்தக் கோரிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் முன் வைக்கப்போவதாக அவர் சொன்னார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதமருடன் தீபாவளி இன்னிசை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், துணைத் தலைவர் டத்தோ டாக்டர் கு .செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கோலாலம்பூர் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்பட பாடகர் வேல் முருகன் உட்பட மலேசிய கலைஞர்கள் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.