கோலாலம்பூர், நவ.20-
தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது மீது வரும் ஜனவரி மாதம் அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்று இயற்கை வளம் , சுற்றுச் சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சர் துவான் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.
“40 ஆண்டுகளுக்குப் பின்னர் தண்ணீர் கட்டணம் ம்று ஆய்வு செய்யப்படுகிறது. இந்தக் கட்டண அதிகரிப்பு வசதி குறைந்த மக்களைப் பாதிக்காத வகையில் இதனை அதிகரிக்கும் விவகாரத்தில் பல தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்படும்” என்று நிக் நஸ்மி சொன்னார்.
“தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) ஒத்துழைப்புடன் பயனீட்டாளர்கள் உட்பட பல தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்படும் என்று தலைநகர் , பங்சாரில் ஸ்பான் ஏற்பாட்டிலான ஊடக துறையினருக்கான தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாளை தாம் விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போதைய பருவ நிலை மாற்றத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிராக அரசாங்கம் என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளது என்பது பற்றியும் இவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
“மழை, வெள்ளம் என பருவநிலை மாற்றம் நம் அனைவரையும் பாதிக்கிறது. இதனை எதிர்கொள்ள அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கை குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் ” என்று இந்த விருந்துபசரிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சார்லஸ் பேசினார்.
அதே சமயம், நாட்டில் 60 விழுக்காடு தண்ணீர் விரயமாகிறது.தண்ணீர் கசிவு, அசுத்தம், வீணே பயன்படுத்துதல் போன்ற செயல்களால் தண்ணீர் விரயம் ஏற்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
“தண்ணீர் விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதுவே மின்சாரம் என்றால் மக்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்துகின்றனர்” என்றார்.
இந்த விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் அச்சு, மின்னியல் சார்ந்த செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.