புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை தியோங் தெரிந்திருக்க வேண்டும் -டத்தோ டாக்டர் லீ பூன் சாய் வலியுறுத்து

89

பெட்டாலிங் ஜெயா, நவ.21-

  புகை பிடிப்பதால் சுகாதாரத்திற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் சுகாதார துணை அமைச்சர், டத்தோ டாக்டர் லீ பூன் சாய் வலியுறுத்தினார்.

   ‘புற்றுநோய், இருதய நோய் உட்பட புகை பிடிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பரவலாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு அதற்கு முக்கிய ஆதாரங்களுடன் ஆதரவு தெரிவிக்கப்படுகிறது’.

   புகை பிடிப்பதால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை முன்னாள் சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் நிரூபிக்கத் தவறி விட்டதாகக் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தியோங் குறிப்பிட்டதற்கு லீ வருத்தம் தெரிவித்தார்.

   தியோங் உண்மையில் மருத்துவத்திற்கான பாட புத்தகத்தைப் படிக்க வேண்டும். அதில் உண்மையான விவரங்கள் அடங்கியிருக்கும். உங்களின் அறிக்கை எனக்கு வருத்தமளிக்கிறது என்று பத்திரிகையாளர்களிடம் பேசிய போது லீ குறிப்பிட்டார்.