எங்களின் பணத்தை திரும்ப ஒப்படைப்பீர்! -கூட்டுறவு நிறுவனத்திற்கு எதிராக இருவர் மகஜர்

108

அம்பாங், நவ.30-

எட்டு வருடங்களுக்கு முன்பு தாங்கள் முதலீடு செய்த பணத்தைத் தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி இருவர் இங்குள்ள கூட்டுறவு ஆணையத்தில் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

டத்தோ செல்வமணி ராமசாமி , மாறன் ஆகிய இருவரே அவர்கள். ஸ்ரீ ரமேஸைத் தலைவராகக் கொண்ட மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் வாயிலாக அந்த மகஜரை இவ்விருவரும் உலு லங்காட்/ கோம்பாக் வட்டார மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் துணை முதிர்நிலை இயக்குனர் ஷூக்கோரிடம் ஒப்படைத்தனர்.

” இது ஓர் அரசாங்கத்தின் நிறுவனம். மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரப்பூர்வமாக இந்த மகஜரை இன்று இவர்களிடம் நாங்கள் ஒப்படைத்துள்ளோம். எங்களுக்கு நல்லதொரு பதில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் செல்வமணி.

“கடந்த 2015 ஆம் ஆண்டில் அந்த கூட்டுறவு நிறுவனத்தில் 1 லட்சம் வெள்ளியை நான் முதலீடு செய்தேன். மறு ஆண்டான 2016 ஆம் ஆண்டில் 10,000 வெள்ளியும் 2017 ஆம் ஆண்டில் 10,000 வெள்ளியும் லாப ஈவாகப் பெற்றேன். அதன் பின்னர் எந்தவொரு பலனும் கிடைக்காததால் 2021 இல் முதலீடு செய்த பணத்தை மீட்டுக் கொள்வதற்காக மனு செய்தேன். ஆனால், இதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை ” என்றார்.

இவ்விவகாரம் தொடர்பில் நான்கு முறை மலேசிய கூட்டுறவு ஆணையத்தில் தான் புகார் செய்திருப்பதாகவும் எவ்வித ஆக்கப்பூர்வ பதிலும் கிடைக்காததைத் தொடர்ந்து மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் இன்று மகஜர் வழங்கியதாகவும் அவர் செய்தியாளர்களிடத்தில் விவரித்தார்.

இதே எண்ணிக்கையிலான தொகையையே தானும் குறிப்பிட்ட அதே ஆண்டில் அந்த கூட்டுறவு நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் தானும் 2016, 2017 என ஈராண்டுகளுக்கு லாப ஈவைப் பெற்றதாக மாறன் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த கூட்டுறவு நிறுவனத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இவர்கள் இந்த மகஜரை வழங்கியிருப்பதாக ஸ்ரீ ரமேஷ் குறிப்பிட்டார்.