புத்ரா ஜெயா, டிச 5-
கல்வியமைச்சில் தமிழ்மொழிக்கான தமிழ் தெரிந்த அதிகாரிகள் உடனடியாகப் பணி அமர்த்தப்படுவது அவசியம் என்று முனைவர் டாக்டர் குமரன் வேலு இன்று கோரிக்கையை முன் வைத்தார்.
அல்லது தாய்மொழிக்கான பிரிவு ஒன்று கல்வியமைச்சில் தொடங்கப்பட வேண்டும் என்றார் .
தாய்மொழிக்கல்வியும் பள்ளியும் எதிர்நோக்கும் சிக்கல்கள் இடமாற்றம், கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை கண்காணிக்க ஒரு பிரிவு தேவை என்று மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழ் கட்டாயப் பாடம் எனும் வகைப்பாட்டில் இருந்து விருப்பப் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழை எடுக்காமல் மற்ற பாடங்களை எடுப்போர் தேசியப்பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
தமிழ் மொழி ஆசிரியர்கள் அதிகம் என்று கல்வியமைச்சு கூறுவதில் யதார்த்த உண்மை இல்லை.
ஆகவே ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழ் மொழி ஒரு கட்டாய பாடமாக உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
இது தவிர்த்து, மாவட்ட அளவிலும் தாய்மொழிக் கல்விக்கான அதிகாரிகள் எல்லா மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்தார்.
இந்த பிரச்சனைகள் தொடர்பாக கல்வி அமைச்சிடம் பேசுவேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.