குறைவான மாணவர்கள்:10 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றும் பணி ஆரம்பம்!

145

புத்ரா ஜெயா டிச 5-

பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிகளில் பத்து தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டது  என்று   மனித அமைச்சர் வி.சிவகுமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் ஒருங்கிணப்பு ( வெற்றி அறவாரியம்) தலைவர் ம. வெற்றிவேலன் தலைமையில் இன்று தமிழ் ஆர்வலர்கள் மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்த சந்திப்பில் வெர்னாகுலர் ஸ்கூல் எக்ஸலன்ஸ் மையத்தை(Centre for Vernacular School Excellence) வழிநடத்தும் அருண் துரைசாமி பத்து தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டார்.

பேராக்கில் 10 பள்ளிகள், கெடாவில் 6 பள்ளிகள், பகாங்கில் 4 பள்ளிகள்,சிலாங்கூரில் 3 பள்ளிகள், ஜோகூரில் 2 பள்ளிகள், நெகிரி செம்பிலானில் 1 பள்ளியும் 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன.

இந்த பள்ளிகளை உடனடியாக காப்பாற்றவில்லை என்றால் மூடும் நிலைக்கு தள்ளப்படும் என்பது நிச்சயம்.

இந்தப் பள்ளிகள் மூடப்படாமல் இருக்க  இடமாற்றம் செய்ய இரு மாதங்களுக்கு முன்பு மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இதன் பயனாக இப்போது முதல் கட்டமாக பத்து தமிழ்ப் பள்ளிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாக அருண் துரைசாமி  குறிப்பிட்டார்.

அவ்வகையில் பேராக்  மாநிலத்தில் கிளப்பா பாலி தோட்டத் தமிழ்ப்பள்ளி,  (8 மாணவர்கள்),சுங்கை போகோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி,  (8 மாணவர்கள்), டத்தோ சிதம்பரம் பிள்ளை  தமிழ்ப்பள்ளி  (8 மாணவர்கள்), சுங்கை பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி   (7 மாணவர்கள்), சப்ராங்  தோட்டத் தமிழ்ப்பள்ளி (6 மாணவர்கள்)ஆகிய தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

சிலாங்கூர் மாநிலத்தில் லிமா பிளாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி  (5 மாணவர்கள்,) பகாங் மாநிலத்தில் புடு தோட்டத் தமிழ்ப்பள்ளி (6 மாணவர்கள்),  போ ரிங்லெட் தோட்டத் தமிழ்ப்பள்ளி  (6மாணவர்கள்) ஆகியவையும் இப்பட்டியலில்  அடங்கும்.

கெடா மாநிலத்தில் படனொக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ( 0 மாணவர்), டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி (6 மாணவர்கள்) ஆகியவையும்  இடம் மாற்றம் செய்யப்படுகின்றன.

கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜா இதற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறார் என்று அருண் துரைசாமி தெரிவித்தார்.

இந்த முக்கிய சந்திப்பில் வருங்காலத்தில்  140 தமிழ்ப் பள்ளிகளை இடமாற்றம் செய்யத் தவறினால், மீள முடியாத இயற்கை மரணத்தை அவை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்படும் என்று அருண் துரைசாமி சுட்டிக் காட்டினார்.

கடந்த 40 ஆண்டுகளில், கிராமப்புறங்கள் மற்றும் தோட்டங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இந்தியர்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.

அங்கிருந்த கிட்டத்தட்ட 89% இந்திய மக்கள் இப்போது நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 67% தமிழ்ப் பள்ளிகள் இன்னும் தோட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் அமைந்துள்ளன. இவற்றில் 62% பள்ளிகள் தோட்டத்திற்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.