மலேசியாவை ஒரு முன்னணி சமையல் இடமாக மாற்றிக் காட்டுவீர்!அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

129

சுபாங் ஜெயா, டிச 6-
நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நாட்டின் உணவகத் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பாடுபடுவோம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக ,அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி மலேசியாவை பிராந்தியத்தில் முன்னணி சமையல் இடமாக மாற்றிக் காட்ட வேண்டும். இதற்கு மலேசிய உணவகங்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு இந்த இலக்கை அடைய பாடுபட வேண்டும் என்றார் அவர்.

பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் .

பிரிமாஸ் தனது இலக்குகளை அடைய மனிதவள அமைச்சுடன் இணைந்து மிகவும் நெருக்கமாக செயல்பட முடியும் என்றார்.

தொழிலாளர் திறன் மற்றும் தரமான பயிற்சிகள் நிலையான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இது ஊழியர்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

“தொழில்நுட்பம் விரிவாக்கம் கண்டு வருவதை நானும் நீங்களும் உணர முடிகிறது. இந்தத் துறையில் மிகவும் முக்கியமானது டிஜிட்டல் உணவு விநியோகமாகும்” என்றார்.

வணிக திட்டத்தை விளம்பரப்படுத்த விற்பனை உத்தி, சமூக ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவுக்கான இந்தோனேசியா தூதர் ஹர்மானோ, பிரிமாஸ் கெளரவ தலைவர் டத்தோ ரெனா. இராமலிங்கம், பிரிமாஸ் தோற்றுநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.