தைப்பூசம்: டாக்டர் குணராஜ்-அரசு சார்பற்ற இயக்கங்கள் சந்திப்பு

376

கிள்ளான், ஜன.3-

   இவ்வாண்டுக்கான தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்யும் பொருட்டு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய இந்து சங்கம் உட்பட அரசு சார்பற்ற இந்து அமைப்புகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு இந்துக்கள் கொண்டாடக்கூடிய திருவிழாவாகும். வரும் 25ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட இருக்கிறது. பொறுப்பற்ற தரப்பினரிடம் கூடுதல் தொகையைச் செலுத்தி பக்தர்கள் தங்களின் பணத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க தர்ம வேல் திட்டத்தின் மூலம் இலவச பால்குடம் வழங்கப்படும். இதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது வேண்டுதல்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பூஜைகள் முடிந்த பிறகு பொருட்களைக் கண்ட இடங்களில் வீசுவதைத் தவிர்ப்பதாகும்.

   தைப்பூசத் திருவிழாவிற்கான பணிக்குழுத் திட்டம் (டி.டி.எஃப்.) பினாங்கு, ஜோகூர், ஈப்போ, சித்தியவான், பத்துமலை, கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகிய பகுதிகளிலும் தொடரப்படும். பணியில் ஈடுபடவிருக்கும் தொண்டூழியர்கள் அனைவரும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை உறுதிச் செய்வர். இங்கு உணவு விற்பனையாளர்கள் சைவ உணவுகளை மட்டுமே விற்க முடியும். தைப்பூசம் மிகவும் ஒழுக்கத்துடன், சுத்தமாக, பாதுகாப்பாக மற்றும் மதித்துக் கொண்டாடப்படுவதற்கு ஆலய நுழைவாயிலில் மதுபானங்கள், சிகரெட்டுகள் விற்பதற்குத் தடை விதிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.