மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் சபாவின் பால்குட யாத்திரை!

738

பத்துகேவ்ஸ், ஜன.22-

மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் சபாவின் பால்குட யாத்திரை 2024 கடந்த சனிக்கிழமை (20ஆம் தேதி) நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தில் இந்த பால்குட யாத்திரை நடைபெறும். அதே போல் இவ்வாண்டும் நடைபெற்றதாக அதன் ஸ்தாபகர் டாக்டர் பிரேமகண்ணன் தெரிவித்தார்.

இதில் சுமார் 45க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து முருகனுக்கு இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இதில் சிறப்பம்சமாகக் கருதப்படுவது யாதெனில், அனைவரும் ஏகமனதாக ஒன்றுகூடி முருகனின் நாமங்களை உச்சரித்துக் கொண்டு திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டு பன்னீர் குடம், சந்தன குடம், அரிசி மாவு குடம், பால் குடம், தயிர் குடம், பூக்குடம் எடுத்து திருமுருகன் திருவுருவத்தை ஏந்தி ஞான வேலை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரையிலிருந்து திருப்புகழ் பாடிக் கொண்டே முருகப் பெருமானை தரிசித்ததாகும்.

அதற்கு முன்பு ஓர் இடத்திலிருந்து எல்லோரும் குடத்தைத் தொட்டு வணங்கி ஒரு சங்கல்ப பிரார்த்தனை செய்து திருப்புகழ் பாராயணம் செய்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். இங்கு வரும் போது அனைவருக்கும் வீட்டிலிருந்து சமைத்து உணவுகளைக் கொண்டு வந்து அவற்றை இங்கு வருவோருக்கும் அன்னதானமாய் வழங்கப்படும்.

இந்த திருப்பணி சபையிலுள்ள பெரியவர்கள் மட்டுமின்றி மாணவர்களும் இதில் ஈடுபடுவர். இது 18ஆம் ஆண்டாக மேற்கொள்ளப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் டாக்டர் பிரேமகண்ணன் கூறினார்.