டத்தோஸ்ரீ மெக்லின் கிண்ண பூப்பந்து போட்டி! வெ.2,000 வென்று முதலிடத்தில் சன்சைன் குழு

332

செமினி, ஜன.29-

மைபிபிபி கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் அமரர் டத்தோஸ்ரீ மெக்லின் டி குருஸ் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட பூப்பந்து போட்டியில் சன்சைன் இன் தெ மோர்னிங் குழு முதலாவது இடத்தை வென்று 2,000 வெள்ளி ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது.

இங்குள்ள பூப்பந்து அரங்கில் நடைபெற்ற டத்தோஸ்ரீ மெக்லின் கிண்ண பூப்பந்து போட்டியை மைபிபிபி இடைக்கால தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

டாக்டர் எம்.சுரேந்திரனை தலைவராகக் கொண்ட மைபிபிபி உலு லங்காட் தொகுதியும் குமாரைத் தலைவராகக் கொண்ட பாங்கி தொகுதியும் இணைந்து இப்போட்டியை இலவசமாக ஏற்பாடு செய்தன.

இதில் இரண்டாவது இடத்தை ஒன்பிலேஸ் மில்லியன் டீம் வென்றது. இக்குழுவிற்கு 1,000 வெள்ளி ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மூன்றாவது நிலையில் கேஆர்சி எனப்படும் கிள்ளான் ரெக்கெட் கிளப்பும் (700 வெள்ளி ரொக்கம், கேடயம்) நான்காவது நிலையில் கின்ராரா ஷட்லர்ஸ் குழுவும் (500 வெள்ளி ரொக்கம் , கேடயம்) வென்றன.

இப்போட்டியை மைபிபி கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ இண்டர் சிங்கும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் பாலமுரளி கோவிந்தராஜூவும் நிறைவு செய்தனர்.

வெற்றி பெற்ற குழுக்களுக்கு டத்தோ இண்டர் சிங் , பாலமுரளி, சுரேந்திரன், குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

“டத்தோஸ்ரீ மெக்லின் ஒரு நல்ல பண்பாளராகவும் சேவையாளராகவும் திகழ்ந்தார். அவரின் நினைவாக இந்தப் பூப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது” என்றார் பாலமுரளி.

அமரர் டத்தோஸ்ரீ மெக்லின் நினைவாக இப்போட்டியைத் தாங்கள் நடத்துவதாகவும் அடுத்தடுத்து பல போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இப்போட்டி ஏற்பாட்டாளரான சுரேந்திரன் கூறினார்.

“முன்னாள் தலைவரின் விருப்பத்திற்கேற்ப மக்களுக்குச் சேவை செய்வதையே எங்களின் இலக்காக நாங்கள் கொண்டுள்ளோம். இதில் வாரத்திற்கு 5 குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்குச் சேர வேண்டிய உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் அடங்கும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதியாக அவரின் சிறப்பு அதிகாரி ராஜன் முனுசாமி, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன், செமினி கிராமத் தலைவர் நடேசன், மைபிபிபி இளைஞர் பிரிவு தலைவர் சத்தியா சுதாகர், டாக்டர் அரசு ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.