பாலாவ் தோட்ட முன்னாள் பாட்டாளிகளுக்கான இழப்பீடு: அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்!

82

செமினி, பிப்.23-

1970ஆம் ஆண்டில் செமினி, பாலாவ் தோட்டத்தில் இருந்து வெளியேறி நில அலுவலகத்திற்குச் சொந்தமான நிலத்தில் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருபவர்களுக்கான இழப்பீடு குறித்து விரைவில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

தற்போது, ஜாலான் புரோகா கம்போங் முனியாண்டியாகத் திகழும் இப்பகுதியில் சமிக்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விடத்தை விட்டு காலி செய்யும்படி இந்நிறுவனம் குடியிருப்பாளர்களைக் கேட்டுக் கொண்டது.

இழப்பீடாக 6 குடும்பங்களுக்கும் தலா 18,800 வெள்ளி வழங்குவதாக முந்தைய மேம்பாட்டு நிறுவனம் கூறியுது. இதில் 18 மாத வாடகையும் 3 மாத முன்பணமும் அடங்கும். ஒன்றரை வருடத்தில் இவர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. எனினும், இது செயல்வடிவம் காணவில்லை.

சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அனைவரும் இழப்பீடு கோரி கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து போராடி வருவதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் பிகேஆர் உலு லங்காட் தொகுதி அலுவலகத்தில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான ராஜன் முனுசாமி மற்றும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன் ஆகியோரின் உதவியை நாடினர்.

இவர்கள் இப்பகுதியில் நீண்ட காலம் வசித்து வருவதால் இவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை மேம்பாட்டாளரிடமிருந்து பெற்றுத் தருவதற்குத் தாங்கள் முயற்சி மேற்கொள்ளப் போவதாக ராமச்சந்திரனும் ராஜனும் குறிப்பிட்டனர்.

இவ்விருவரின் முயற்சியில் காஜாங் நகராண்மைக் கழக பொறியியல் துறை இயக்குநர் இஞ்ஜீனியர் ஹாஜா ஃபாடிலா ரசாலி தலைமையில் மேம்பாட்டு நிறுவனத்துடன் நேற்று முன் தினம் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது தங்களுக்கு ஒரு குடும்பத்திற்குத் தலா 1 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டு தொகையும், 6 மாத வாடகைக் கட்டணமாக தலா ஆயிரம் வெள்ளியும் , ஆலயத்திற்கு 15 ஆயிரம் வெள்ளியும் வழங்கும்படி மேம்பாட்டு நிறுவனத்திடம் இவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து அடுத்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஃபாடிலா கூறினார்.

இக்கூட்டத்தில் காஜாங் நகராண்மைக் கழக திட்டமிடல் மேம்பாட்டு துறை இயக்குநர் ஹாஜி ரிடுவான், இக்கழகத்தின் சட்டத் துறை துணை இயக்குனர் நோர்யாத்தி, உலு லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலக அமலாக்க பிரிவு அதிகாரி, போஸ்டிட் பாலாவ் நிறுவன திட்டப் பிரிவு நிர்வாகி மேஜர் அட்னான் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.