கோலாலம்பூர் மார்ச் 2-
நாட்டின் விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பை மேலோங்கச் செய்யும் முயற்சியாக அண்ட்ரூ டேவிட் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட மஇகா தேசிய விளையாட்டு பிரிவு ஆக்கப்பூர்வ திட்டங்களை முன்னெடுக்கவிருக்கிறது.
விளையாட்டுத் துறையில் உள்நாட்டில் மட்டுமின்றி உலக அரங்கிலும் முத்திரை பதித்தவர்கள் இந்திய இளைஞர்கள். அவ்வகையில் இத்துறையில் ஆர்வமுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அவர்களை விளையாட்டு வீரர்களாகவும் வீராங்கனைகளாவும் திகழச் செய்ய தனது செயல்திட்டங்களோடு களத்தில் இறங்கிவிட்டது மஇகா தேசிய விளையாட்டு பிரிவு.
இந்நோக்கத்திற்காக இப்பிரிவு 7 திட்டங்களை அமல்படுத்தவிருப்பதாக அண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார்.
” விளையாட்டு கிளினிக், போட்டிக்கான குழு, மின்னியல் இதழ், விளையாட்டு விருது விழா, மூத்த விளையாட்டாளர்களின் வழிகாட்டலை நாடுவது, விளையாட்டு மையத்தை அமைத்தல் முதலியவை இதில் அடங்கும் ” என்று இங்குள்ள 3 பிரவுண்ட் போயிஸ் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா தேசிய விளையாட்டு பிரிவின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் இப்பிரிவு திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
“சிலம்பம் , கபடி சங்கங்களுடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் வழி சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்குவதோடு நாட்டின் விளையாட்டுத் துறையின் மேன்மைக்கு இவர்கள் பங்காற்றுவதையும் உறுதிப்படுத்தலாம்” என்றார்.
மஇகா தேசிய விளையாட்டு பிரிவின் தலைவராகத் தன்னை நியமித்த மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகிய இருவருக்கும் அண்ட்ரூ டேவிட் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
துன் சாமிவேலு கிண்ணக் காற்பந்து போட்டியைப் போன்று பிரசிடெண்ட் கிண்ணக் காற்பந்து போட்டியை நடத்தவும் தேசிய விளையாட்டு பிரிவு எண்ணம் கொண்டிருப்பதாகவும் தேசிய நிலையிலான இப்போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மஇகா தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவருமான அண்ட்ரூ கூறினார்.
கடந்த காலங்களில் கால்பந்து போட்டியில் இந்தியர்கள் புகழ் பெற்று விளங்கினர். அந்தப் பொற்காலத்தை பிரசிடெண்ட் கிண்ணக் காற்பந்து போட்டி மீண்டும் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்ட்ரூ தலைமையில் இன்று நடைபெற்ற மஇகா தேசிய விளையாட்டு பிரிவின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ இராஜசேகரன், தகவல் பிரிவு தலைவர் தீனாளன், நிர்வாக செயலாளர் குணசீலன், மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ் உட்பட அனைத்து மாநில விளையாட்டு பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.